அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர* நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர… தனிமை.. தனிமை.. தனிமை..!
சன்னல் படுக்கை நோயாளிக்கு புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்..
“உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!”
கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!
அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்..
” நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!”
எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்..
சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..
“ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!”
ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..
ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..
மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை… ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.
இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க…. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!
அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்…?
மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..
செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..
“நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..!”
நீதி : தன் துன்பங்களை மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களைப் போற்றாவிட்டாலும் பரவாயில்லை.. குறை கூறாதீர்கள்..!
கீதாவுக்கு அன்று பிறந்தநாள்.. மிகவும் பரபரப்பாக இருந்தாள். அவளுடன் படிக்கும் ரமேஷிடமிருந்து வாழ்த்து எஸ் எம் எஸ் அல்லது அழைப்பு வரும் என்று காத்திருந்தாள். யார் யாரோ வாழ்த்தினர். ஆனால் ரமேஷிடமிருந்து வரவில்லை. கீதா சற்று கலக்கமுற்றாள். அவளுக்கு அவனைப் பிடிக்கும்.. அவனுக்கு..? தெரியாது.
அப்போது, கீதாவின் குட்டித் தங்கை ரமா கையில் தன் பாடநோட்டுடன் வந்து கீதாவைக் கூப்பிட்டாள்.
“அக்கா..!”
கீதா குனிந்து பார்த்து, அலட்சியப்படுத்தினாள்.. இவளுக்கு இதே வேலை.. இது என்ன.. அது என்ன.. அதைச் சொல்லிக்கொடு என்று ஒரே தொல்லை. இரண்டாம் வகுப்பு படிக்கும் ரமாவுக்கு கீதா என்ன ட்யூஷன் மிஸ்ஸா..?
ரமா மீண்டும் அழைத்தாள்.. “அக்கா..!”
“ப்ஸ்ஸ்ஸ்ஸ்.. தொல்லை பண்ணாதே.. அப்புறம் வா..!”
இந்த ரமேஷுக்கு ரொம்ப கர்வம்.. ஒரு க்ரீட்டிங் அனுப்பினால் குறைந்தா போய்விடுவான்..? மனதுக்குள் சிந்தனை ஓடியதில் நேரம் போனது தெரியவில்லை.
இரவும் வந்தது. ஆனால் ரமேஷிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. கீதா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. ‘திமிர் பிடித்த ராஸ்கல்.. அந்த ஷீலா பிறந்தநாளுக்கு உருகி உருகி கால் செய்தானே.. அவளுக்கு நான் என்ன குறைச்சலா..? மனம் குமைந்தது.
மீண்டும் ரமா.. “அக்கா.. ப்ளீஸ்.. இந்த நோட்டைப் பாரேன்..!”
கீதாவுக்கு இருந்த கடுப்பில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நோட்டைப் பிடுங்கி தரையில் விசிறி அடித்தாள். “போ சனியனே.. மூட் தெரியாமல் உயிரை வாங்காதே..!”
குழந்தை காயப்பட்டு போயிற்று. மெல்ல நோட்டைப் பொறுக்கி எடுத்து தன் அறைக்குத் திரும்பும் ரமாவின் கண்களில் கண்ணீர் கரை கட்டியது.
அப்புறமும் கொஞ்ச நேரம் ரமேஷுக்காக காத்திருந்தாள் கீதா. பலனில்லை.
வீட்டின் உள்ளே ஏதோ வேலையாக போகும்போது கீதா கவனித்தாள்.. ரமாவின் அறையில் விளக்கு எரியவில்லை. தூங்கிவிட்டாளோ..? பாவம் .. குழந்தையை ரொம்ப புண்படுத்திவிட்டேனோ..? கீதா மனம் கசிந்தது..
அறைக்குள் வந்து மெல்ல அழைத்தாள்..
ரமா…!
அக்கா..!
தூங்கிட்டியா..?
இல்லேக்கா..
சரி நோட்டை எடுத்துட்டு வா..
குழந்தை குதூகலத்துடன் கட்டிலில் இருந்து குதித்து ஓடி நோட்டை எடுத்துவந்து நீட்டியது.
எது உனக்கு புரியலே..? காட்டு.. சொல்லித் தரேன்..
இதைப் பார் அக்கா..
நோட்டை விரித்த கீதா வியந்து போனாள்.. குழந்தை தனக்குத் தெரிந்த முறையில் ஒரு பிறந்த நாள் வாழ்த்துப்படம் வரைந்து வைத்திருந்தாள்..!
என் அன்பு அக்காவுக்கு என்று பெரிய எழுத்துகளில் வண்ண வண்ண எழுத்துகளில் எழுதி, கீழே ஒரு பூங்கொத்து.. அதற்கும் கீழே பிறந்த நாள் வாழ்த்துகள் என்று மீண்டும் வண்ண எழுத்துகள்..!
நேற்றிரவு நீண்ட நேரம் ஏதோ படிக்கிறாள் என்று நினைத்தோமே.. இதைத்தான் வரைந்தாளா..? ஆசையுடன் வாழ்த்து தெரிவிக்க வந்த குழந்தையைத்தான் விரட்டி அடித்தேனா..?
“என் செல்லமே..” வாரியணைத்து முத்தமழை பொழிந்தாள் கீதா.
நீதி : கானல் நீருக்காக காலடியில் ஊற்றெடுக்கும் நறுஞ்சுவை நீரை உதாசீனம் செய்யாதீர்.
ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.
ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.
பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.
வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது.
பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் ‘நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்’ என்று சொன்னான்.
மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள்.
இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.
அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர்.
பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது.
மற்ற ஒன்பது விவசாயிகளும் “இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு” என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர்.
அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர்.
அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.
அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.
மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர்.
நீதி : கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய்.
தீர விசாரித்துத் தெளிவதே மெய்.
ஒரு நாட்டை ஆண்ட அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.
தலைமை மருத்துவன் “மன்னா! இதற்கு மருந்தே கிடையாது” என்று உண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான்.
ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான்.
மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர். “வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா” என்று கூறினர்.
நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியவில்லை.
அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமை மருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும் புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் “என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்” என்று கூறினான்.
வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள். அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.
அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.
அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். “மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம் முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்” என்றான்.
மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. “இப்போதே அந்தப்புரத்திற்குப் போய் தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்” என்று கிளம்பினான்.
அப்போது மருத்துவன் “மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!” என்றான்.
முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான். மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டே ஓடி விட்டார்கள்.
அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான். அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. “குரங்கை நினைக்கக் கூடாது” என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை.
மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான்.
ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது.
பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப் பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.
நீதி : பிடிவாதக்காரர்களையும், முட்டாள்களையும் திருத்த நேர்வழி பயன்படாது.
ஜிங்ஜு ஒரு வித்தியாசமான பிறவி. தான் ஆணழகனாய், அறிவுள்ளவனாய் பிறந்திருந்தால்
இளவரசியை திருமணம் செய்திருக்கலாம் என்று பகல் கனவு காண்பவன். தன்னிடமுள்ள
குறைகளை எண்ணி எப்போதும் வருத்தத்திலேயே இருப்பவன். மருந்திற்கு கூட அவன்
முகத்தில் சிரிப்பை பார்க்க முடியாது. தெருவில் யாராவது சிரித்தால், அவர்கள்
தன்னைப் பார்த்துதான் சிரிப்பதாக நினைத்துக் கொண்டு கோபமடைந்து அவர்களிடம்
சண்டைக்கு செல்வான். இறுதியில் ஒருநாள் தனது குணத்தை புரிந்து கொள்ள இயலாமல்,
ஜென் மாஸ்டரிடம் கேட்டு மனத் தெளிவடைய நினைத்தான்.
“யார் சிரித்தாலும் எனக்கு கோபம் வருகிறது ஏன் அப்படி?” என்று மாஸ்டரிடம்
கேட்டான். இதை கேட்டவுடன் ஜென் மாஸ்டர் `ஹாஹா’ என்று சிரித்துக் கொண்டே
சென்றுவிட்டார்.
ஜென் மாஸ்டர் எதற்கு சிரித்தார்? என்ற காரணம் புரியாமல் ஜிங்ஜு மிகவும்
குழம்பினான். அதை நினைத்து, நினைத்து மூன்று நாட்களாக ஊண் உறக்கமின்றி
குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான்.
அடுத்த நாள் ஜென் மாஸ்டரிடம் சென்று, “அன்று என்னைப் பார்த்து ஏன் மாஸ்டர்
சிரித்தீர்கள்? நான் வருத்தத்தில் மூன்று நாட்களாக சாப்பிடவே இல்லை” என்று
கூறினான். உடனே ஜென் மாஸ்டர், “முட்டாளே! இப்போதாவது உனக்கு புரிகிறதா? நீ
கோமாளியை விட சிறியவன், அது தான் உனது பிரச்சினை” என்று கூறினார். இதைக் கேட்ட
ஜிங்ஜு அதிர்ந்து போனான்.
“நான் ஒரு கோமாளியை விட சிறியவன் என எக்காரணத்தால் குறிப்பிட்டீர்கள்?” என்று
கோபத்துடன் கேட்டான்.
அதற்கு ஜென் மாஸ்டர், “கோமாளியாவது பிறர் சிரிப்பதைக் கண்டு மகிழும்
தன்மையுடையவன். ஆனால் நீ மற்றவர்கள் சிரிப்பதை எண்ணி வருந்தி குழப்பத்துடன்
இருக்கிறாய். இப்போது சொல், நீ கோமாளியை விட சிறியவன் தானே” என்றார்.
இதைக் கேட்ட ஜிங்ஜு தனது தவறை உணர்ந்து, குழப்பம் தீர்ந்த சந்தோஷத்தில்
சிரித்தான்.
நீதி: என்ன நடந்தாலும், அதனால் விளையும் நன்மையை மட்டும் எடுத்துக் கொண்டு
மகிழும் தன்மை, வாழ்வில் மன அமைதி மற்றும் சந்தோஷத்தை பெற்றுத் தரும்.