சேது சமுத்திர திட்டமும் – கடல் வழி வர்த்தகமும்

 

  சேது ச‌முத்திர‌ திட்ட‌ம் என்றால் என்ன‌?

இந்திய பெருங்கடல் பகுதியில் இராமேஸ்வ‌ர‌ம், பாம்ப‌ன் ப‌குதிக‌ளுக்கும் நாக‌ப‌ட்டின‌த்திற்கும் இடைப்ப‌ட்ட கடல் ப‌குதி பாக் நீரிணை என்றும், பாம்ப‌னுக்கு பிறகான க‌ன்னியாகும‌ரி வ‌ரையிலான‌ க‌டல் பகுதி பாக் கடல் என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் பாக் கடல் பகுதி கப்பல்கள் சென்று வர தேவையான ஆழத்தோடு உள்ளது, இதனால் இங்கு கால்வாய் தோண்ட தேவையில்லை. பாக் நீரிணை பகுதியும், அங்கு உள்ள மணற் திட்டுகளும் கப்பல்கள் செல்வதற்கு தேவையான ஆழமில்லாத பகுதிகள் இந்த பாக் நீரிணையையும், மணற் திட்டையும் ஆழப்படுத்தி ஒரு கால்வாய் அமைக்கும் பணியே சேது சமுத்திர திட்டமாகும்(பார்க்க-படம்). 300 மீட்ட‌ர் அக‌ல‌மும், 12.8 மீட்ட‌ர் ஆழ‌‌மும் கொண்ட‌து இந்த சேது சமுத்திர கால்வாய். இந்த‌ கால்வாய் ஏற்ப‌டுத்தும் ப‌ணி தான் சேது ச‌முத்திர‌ திட்ட‌ம் என்ற‌ழைக்க‌ப்ப‌டுகின்ற‌து. இந்தியாவின் மேற்கு, கிழ‌க்கு ப‌குதிக‌ள் இந்த‌ திட்ட‌த்தின் மூல‌ம் ஒருங்கிணைக்க‌ப்ப‌டும். இதுவ‌ரை மும்பை(மேற்கு), கொச்சின்(தென் மேற்கு) ப‌குதியிலிருந்து ஒரு க‌ப்ப‌ல் சென்னை வ‌ர‌ வேண்டுமெனில் அவை இல‌ங்கை சுற்றிக்கொண்டு தான் வ‌ரும், இனி அது த‌விர்க்க‌ப்ப‌ட்டு இந்த‌ கால்வாயின் மூல‌ம் அவை இந்திய‌ க‌டல் ப‌குதி வ‌ழியாக‌வே சென்று சென்னை, விசாக‌ப்ப‌ட்டின‌ம், பார‌தீப் போன்ற‌ கிழ‌க்கு ப‌குதியில் உள்ள‌ துறைமுக‌ங்க‌ளை சென்ற‌டையும். உச்ச‌நீதிம‌ன்ற‌ம் இராமேசுவரத்திற்கும், தலைமன்னாருக்கும் இடையில் உள்ள மணல் திட்டு பகுதியில் கால்வாய் தோண்டுவ‌தற்கு த‌டை விதித்த‌தின் மூல‌ம் 17-09-2007ல் இந்த ப‌குதியில் கால்வாய் தோண்டும் ப‌ணி நிறுத்த‌ப்ப‌ட்ட‌து. பாக் நீரிணையில் கால்வாய் தோண்டும் ப‌ணி இந்த‌ திட்ட‌த்தை செய‌ல்ப‌டுத்தி வ‌ரும் இந்திய‌ அக‌ழ்வாய்வு நிறுவ‌னத்தினால் (Dredging Company of India) 16-07-2009 அன்று நிறுத்த‌ப்ப‌ட்ட‌து.

தோண்ட வேண்டிய மணலின் அளவு = 82.5 Million Cubic Meter(82.5 இலட்சம் மீட்டர்)

இதுவரை தோண்டியுள்ள மணலின் அளவு = 33.99 Million Cubic Meter (33.99 இலட்சம் மீட்டர்) (1)

இதை முழுமையாக‌ முப்ப‌து விழுக்காடு ப‌ணிக‌ள் முடிந்துவிட்ட‌தாக‌ க‌ருத‌முடியாது. தொட‌ர் க‌ட‌ல்நீரோட்ட‌த்தின் கார‌ண‌மாக‌ இந்த‌ ப‌குதியில் 12.8 மீட்ட‌ரில்(தோண்ட‌ப்ப‌ட்ட‌ ஆழ‌ம்) ஒரு குறிப்பிட்ட‌ அள‌வு ம‌ண‌ல் மூடியிருக்கும். 2004ல் இந்த‌ கால்வாய் தோண்டுவ‌த‌ற்கான‌ திட்ட‌ ம‌திப்பு 2,400 கோடிக‌ளாகும், 2010லேயே இது இர‌ண்டு ம‌ட‌ங்காகி விட்டது(2). இன்றைய நிலையில் இந்த திட்டத்தை முடிக்க இருபதாயிரம் கோடி ரூபாய்கள் செலவாகும்.

இப்பொழுது நாம் சேது சமுத்திர திட்டத்தில் உள்ள சில கேள்விகளுக்கான பதில்களை பார்ப்போம்.

சேது ச‌முத்திர‌ திட்ட‌த்தினால் இந்தியாவிற்கு என்ன‌ ப‌ய‌ன்?

இந்தியாவிற்கு ஒரு புதிய‌ க‌ட‌ல்வ‌ழி கிடைக்கும். இந்திய‌ க‌ட‌ற்ப‌டை க‌ப்ப‌ல்க‌ள் இனி இலங்கையை சுற்றி செல்லும் நிலை மாறி மேற்கு ப‌குதிக்கும், கிழ‌க்கு ப‌குதிக்கும் இந்திய‌ க‌ட‌ற்ப‌டை க‌ப்ப‌ல்க‌ள் நேராக‌வே செல்லும்.

சேது சமுத்திர திட்டத்தினால் தூத்துக்குடி துறைமுகம் பெரிய வளர்ச்சியடையுமா?

இந்தியாவின் மேற்கிலிருந்து, கிழ‌க்கு (உதாரணம் -மும்பையிலிருந்து கல்கத்தாவிற்கு) ம‌ற்றும் கிழ‌க்கிலிருந்து மேற்கு (உதாரணம் -க‌ல்க‌த்தாவிலிருந்து – மும்பைக்கு) ந‌டைபெறும் க‌ட‌ல் வ‌ழி வர்த்தகம் கொழும்பு மூல‌மாக‌வே ந‌டைபெற்று வ‌ருகின்ற‌து. இந்நிலை மாறி இனி இந்த‌ க‌ட‌ல்வ‌ழி வர்த்தக‌‌ம் தூத்துக்குடி துறைமுக‌ம் மூல‌மாக‌ ந‌டைபெறும், அத‌ற்காக‌ தூத்துக்குடி துறைமுக‌த்தில் ஒரு இடைநிற் மையம் (Trans-shipment Hub) ஒன்றை உருவாக்க‌ வேண்டும். அவ்வாறான‌ ஒரு புதிய‌ இடைநிற் மையம் உருவாக்க‌வில்லையெனில் “சேது ச‌முத்திர‌ திட்ட‌ம்” எவ்வித வர்த்தக ப‌ய‌னையும் தூத்துகுடி துறைமுகத்திற்கு த‌ராது. 2004லிருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு புதிய‌ இடைநிற் மையம் (Trans-shipment Hub) உருவாக்க‌வேண்டும் என்ற‌ கோரிக்கைக்கு இன்னும் ஒப்புத‌ல் கொடுக்க‌ப்ப‌ட‌வில்லை, அத‌னால் தூத்துக்குடி துறைமுக‌ம் பெரிய வ‌ள‌ர்ச்சிய‌டையாது என்பதே உண்மை. இல்லை இது பொய் என்பவர்கள் இந்த படத்தை பார்க்கவும். ஒரு தெளிவான‌ க‌ட‌ல்வ‌ர்த்த‌க‌ம் அற்ற‌ இந்தியாவில் உள்ள‌, வ‌ரவி‌ருக்கும் க‌ப்ப‌ற்துறைமுக‌ங்க‌ள். உங்க‌ள் வீட்டுக்கு பின்னால் க‌ட‌ல் இருந்து உங்க‌ளுக்கு ஒரு துறைமுக‌ம் வேண்டுமென்றால், அதை உங்க‌ளால் க‌ட்ட‌முடியும் என்றால், நீங்க‌ள் கேட்டாலும் அனும‌தி கொடுக்கும‌ள‌விற்கு தான் உள்ள‌து இந்தியா. அதே நேர‌த்தில் இல‌ங்கையை க‌வ‌னியுங்க‌ள் ஏற்க‌ன‌வே கொழும்பு துறைமுக‌ம் 5 மில்லிய‌ன் சரக்கு பெட்டகங்க‌ளை (Container)கையாளும் வ‌கையில் இருக்கும் பொழுது அவ‌ர்க‌ள் அடுத்து ஹ‌ம்ப‌ன்தோட்டாவில் 20 மில்லிய‌ன் சரக்கு பெட்டகங்க‌ளை(Container) கையாளும் வ‌கையில் க‌ட்டி முடிக்கும் நிலையில் உள்ள‌து துறைமுக‌ம். அப்ப‌டியே இந்தியாவில் க‌ட்ட‌ப்ப‌டும் துறைமுக‌ங்க‌ளையும், அவ‌ற்றின் சரக்கு பெட்டகங்க‌ளை கையாளும் திற‌னையும் பாருங்க‌ள். இந்தியாவின் தெளிவற்ற கடற்வர்த்தம் விளங்கும்.

மேலும் சேது கால்வாயில் அதிக‌ப‌ட்ச‌மாக 30,000 DWT (Dead Weight in Tons- ) எடை கொண்ட கப்பல்கள் மட்டுமே இதன் வழியாக செல்ல முடியும். க‌ட‌ல் வ‌ழி போக்குவ‌ர‌த்து செல‌வை குறைக்க‌ எல்லா க‌ப்ப‌ல், க‌ட‌ல் வ‌ழி வ‌ர்த்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ளும் செலவை குறைக்க பெரிய‌ க‌ப்ப‌ல்க‌ளையே ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌ன‌. 30,000 DWT அதிக‌மான‌ எடை கொண்ட‌ க‌ப்ப‌ல்க‌ளில் வ‌ர்த்த‌க‌ம் ந‌டைபெறும் பொழுது அவை முழுதும் கொழும்பு துறைமுக‌ம் வ‌ழியாக‌ ந‌டைபெறும்.

இதுவரை இந்தியாவின் கிழக்கு பகுதி(சென்னை, விசாகப்பட்டினம்,கொல்கத்தா), வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளுக்கான ப‌ன்னாட்டு க‌ட‌ல் வ‌ழி வ‌ர்த்த‌க‌ம் கொழும்பு மூல‌ம் ந‌டைபெற்ற‌து, இது மாறுமா?

முதலில் பன்னாட்டு கடல் வர்த்தகம் பற்றி பார்ப்போம். அத‌ற்கு முன்னால் சில‌ வார்த்தைக‌ளை ப‌ற்றிய அறிமுகத்தையும், அதற்கான விள‌க்க‌த்தை தெரிந்து கொள்ள‌ வேண்டியது அவ‌சிய‌ம்.

சிறிய கப்பல் (Feeder Vessal ) – அதிக‌ப‌ட்ச‌ம் ஆயிரம் சரக்கு பெட்டகங்க‌ளை (container) எடுத்துச் செல்லும் கப்பல். இந்த‌ க‌ப்ப‌ல்க‌ள் இடைநிற் மையம் (Transit Point) என்ற‌ குறிப்பிட்ட‌ இட‌ம் வ‌ரை ம‌ட்டுமே செல்லும்.

பெரிய கப்பல் (Mother Vessal) – ஆயிரத்திற்கும் அதிகமான‌ சரக்கு பெட்டகங்க‌ளை (container) எடுத்துச் செல்லும் கப்பல். இந்த கப்பல்கள் இடைநிற் மையத்திலிருந்து (Transit Point) பொருட்கள் செல்ல வேண்டிய துறைமுகம் வரை செல்பவவை.

இடைநிற் மையம் (Trans-shipment Hub) – தொடக்க துறைமுகத்திலிருந்து கிளம்பி வரும் சிறிய கப்பல்க‌ள் இங்கு நிறுத்த‌ப்ப‌ட்டு அந்த‌ க‌ப்ப‌ல்க‌ளிலுள்ள‌ சரக்கு பெட்டகங்க‌ள் அங்குள்ள துறைமுகத்தில் இற‌க்க‌ப்ப‌ட்டு பெரிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு மாற்ற‌ப்ப‌டும். மேற்கூறிய‌ நாடுகளுக்கான பன்னாட்டு கடல் வழியில் மொத்தம் இரண்டு இடைநிற் மையங்க‌ள் உள்ள‌ன‌. ஒன்று சிங்க‌ப்பூர், ம‌ற்றொன்று கொழும்பு. சிங்க‌ப்பூர் அமெரிக்கா செல்லும் பொருட்க‌ளுக்கும், கொழும்பு ஐரோப்பிய நாடுக‌ளுக்கு செல்லும் பொருட்க‌ளுக்கான‌ இடைநிற் மையங்க‌ளாக‌வும் உள்ள‌து.

இந்தியா, இலங்கை,வ‌ங்க‌ தேச‌ம், சீனா, ஜ‌ப்பான்,சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட‌ நாடுகளிலிருந்து அமெரிக்கா செல்லும் பொருட்கள் பெரும்பான்மையாக அந்த நாடுகளிலுள்ள துறைமுகத்திலிருந்து சிறிய கப்பல்க‌ள் மூலமாக கிளம்பி சிங்கப்பூர் வரை செல்கின்றன. சிங்கப்பூரில் உள்ள துறைமுகத்தில் இந்த சரக்கு பெட்டகங்கள் இறக்கப்பட்டு அங்கிருந்து பெரிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு மாற்ற‌ப்ப‌டும். இந்த கப்பல்கள் அமெரிக்காவில் தாங்கள் சென்று சேர வேண்டிய துறைமுகம் வரை செல்லும். இதுவே ஐரோப்பிய‌ நாடுகளுக்கு செல்லும் பொருட்கள் பெரும்பான்மையாக கொழும்பு துறைமுகம் வரை வந்து அங்கிருந்து பெரிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு மாற்ற‌ப்பட்டு தங்கள் இலக்கிற்கான துறைமுகம் வரை செல்லும்.

இதில் இந்தியாவில் உள்ள‌ மும்பை துறைமுக‌ம் போன்ற‌ பன்னாட்டு துறைமுக‌ங்க‌ளுக்கு வில‌க்கு இந்த‌ பன்னாட்டு துறைமுக‌ங்க‌ளுக்கு பெரிய க‌ப்ப‌ல்க‌ளே வ‌ந்து செல்லும். ச‌ரி ஒரு துறைமுக‌ம் பன்னாட்டு துறைமுக‌மாக‌ மாற‌ என்ன‌ வேண்டும்? ஒன்று பெரிய க‌ப்ப‌ல்க‌ள் வ‌ரும‌ள‌விற்கு க‌டலின் த‌ரைத்த‌ள‌ம் ஆழ‌மாக‌ இருக்க‌ வேண்டும் (15 மீட்டருக்கு மேல்). இன்னொன்று அதிக‌ள‌வு சரக்கு பெட்டகங்கள் அந்த‌ துறைமுக‌த்திற்கு வ‌ர‌ வேண்டும்.

இந்தியாவில் மேற்கு பகுதியில் மும்பை த‌விர்த்து கிழ‌க்கிலும், தெற்கிலும் எந்த‌ ஒரு பன்னாட்டு துறைமுக‌மும் இல்லாத‌தால் இந்த‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ துறைமுக‌ங்க‌ளிலுருந்து சிறிய‌ க‌ப்ப‌ல்க‌ள் ம‌ட்டுமே வ‌ந்து செல்கின்ற‌ன‌. சென்னையிலும், கொச்சினில் புதிதாக‌ க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌ வள்ளார்படம் துறைமுக‌த்திலும் ஒரு பெரிய கப்பல் ம‌ட்டுமே வ‌ந்து போகின்ற‌து.

சேது கால்வாய் பணி முடிந்தாலும் மேற்சொன்ன‌வையே ந‌ட‌க்கும். அதாவது பன்னாட்டு கடல் வர்த்தகம் கொழும்பு, சிங்கப்பூர் மூலமாகவே நிகழும். ஒரே ஒரு மாற்ற‌ம் ம‌ட்டுமே இதில் உண்டு, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட தென் கிழக்கு, கிழ‌க்கு க‌ட‌ற்க‌ரைக‌ளிலிருந்தும், வ‌ங்க‌தேச‌ க‌ட‌ற்க‌ரையிலிருந்தும் கிள‌ம்பும் க‌ப்ப‌ல்கள் இல‌ங்கையின் கிழ‌க்கு ப‌குதியை சுற்றி கொழும்பு செல்லாம‌ல் தூத்துக்குடி க‌ட‌ல் வ‌ழியாக‌ கொழும்பு செல்லும், இதனால் பயண‌ தூரம் குறையும். அதே ச‌ம‌ய‌ம் மூன்று முக்கிய‌ கார‌ணிக‌ளையும் நாம் க‌ண‌க்கில் கொள்ள‌ வேண்டும்.

1. அதிகபட்சமாக 30,000 DWT (Dead Weight in Tons) எடை கொண்ட கப்பல்கள் மட்டுமே இதன் வழியாக செல்ல முடியும். ஏனென்றால் சேது சமுத்திர கால்வாயின் ஆழ‌ம் 12.8 மீட்ட‌ரே. மேலும் க‌ப்ப‌ல்க‌ள் இந்த‌ கால்வாய் வ‌ழியாக‌ செல்வ‌த‌ற்கு இந்திய‌ அர‌சிற்கு ஒரு குறிப்பிட்ட‌ தொகையை செலுத்த‌ வேண்டும் (தேசிய‌ நெடுஞ்சாலையில் சுங்க‌ வ‌சூல் மைய‌ம் போல)

2.இந்த‌ கால்வாய் ப‌குதியில் அந்த‌ க‌ப்ப‌லின் மாலுமி க‌ப்ப‌லை இய‌க்க‌ கூடாது, இந்த‌ கால்வாய் ப‌குதியின் நீரோட்ட‌ங்க‌ளை அறிந்த‌ ஒரு உள்ளூர் மாலுமி தான் க‌ப்ப‌லை ஓட்ட‌ வேண்டும். இந்த‌ உள்ளூர் மாலுமி ந‌டைமுறைதான் எல்லா துறைமுக‌ங்க‌ளிலும் நடைமுறையில் உள்ளது. ஆக‌வே இந்த‌ உள்ளூர் மாலுமிக்கும் ஒரு குறிப்பிட்ட‌ தொகையை இந்த‌ கால்வாய் வ‌ழி செல்லும் க‌ப்ப‌ல்க‌ள் கொடுக்க‌ வேண்டும்.

3.இந்த‌ கால்வாயின் வ‌ழியே ஒரு குறிப்பிட்ட‌ வேக‌த்தில் தான் செல்ல‌ வேண்டும். இலங்கையை சுற்றி கொண்டு செல்லும் போது செல்லும் வேகத்தை விட 30 விழுக்காடு குறைவான வேகத்தில் தான் செல்ல முடியும்.

மேற்கூறிய‌ மூன்றில் முத‌ல் இர‌ண்டு கார‌ண‌ங்க‌ளினால் இல‌ங்கையை சுற்றி செல்வ‌த‌ற்கும், சேது கால்வாய் வ‌ழியாக‌ செல்வ‌த‌ற்கும் பெரிய‌ அள‌வில் பொருட் செலவில் வித்தியாச‌ம் இருக்காது என‌ முன்னால் க‌ப்ப‌ற் ப‌டை மாலுமியான‌ பால‌கிருஷ்ண‌ன் கூறியுள்ளர்(3,4,5). மேலும் இவர்‌ பொருட் செலவிற்கான கணக்கீட்டிற்காக‌ சேது கால்வாய் திட்டத்தின் தொடக்க மதிப்பை வைத்திருந்தார். இன்று சேது கால்வாய்‌ திட்ட‌ செல‌வு ப‌ல‌ ம‌ட‌ங்கு கூடியுள்ள‌து, அந்த‌ செல‌வை எல்லாம், இந்த‌ கால்வாயில் செல்லும் க‌ப்ப‌ல்க‌ள் செலுத்தும் ப‌ண‌த்தின் மூல‌மாக‌வே அடைய‌ வேண்டியிருப்ப‌தால் ஒரு க‌ப்ப‌ல் இந்த‌ கால்வாயில் செல்லுவ‌த‌ற்காக‌ இந்திய‌ அர‌சிற்கு செலுத்த‌ வேண்டிய‌ தொகை அவ‌ர் க‌ண‌க்கிட்ட‌தை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிகமாக‌ இருக்கும். மேலும் சேது கால்வாய் வழியாக செல்வதால் பயண நேரத்திலும் எந்த ஒரு பெரிய மாற்றமும் இருக்காது, குறைந்த‌ வேகமும், உள்ளூர் மாலுமியை ஏற்றி, இற‌க்குவ‌த‌ற்கான‌ நேர‌மும் ப‌ய‌ண‌ நேரத்தை வெகுவாக‌ பாதிக்கின்ற‌ன‌.

இதை க‌ப்ப‌ல், க‌ட‌ல் வ‌ழி வ‌ர்த்த‌க‌ நிறுவ‌ன‌ங்க‌ள் க‌ண‌க்கில் கொண்டு பார்க்கும் பொழுது அவ‌ர்க‌ள் இல‌ங்கையை சுற்றிக் கொண்டு கொழும்பு செல்வார்க‌ளே த‌விர‌ சேது கால்வாய் வ‌ழியாக‌ அல்ல‌ என்றே அறிய‌ முடிகின்ற‌து. மேலும் தொட‌ர்ச்சியான‌ க‌ட‌ல் நீரோட்ட‌த்தினால் கொண்டு வ‌ந்த‌ கொட்ட‌ப்ப‌டும் ம‌ண‌லை வெளியேற்ற‌ தொடர்ந்து பராமரிப்பு தேவையும் இந்த கால்வாய்க்கு உள்ளது (பொதுவாக எல்லா கடல் கால்வாய்களுக்கும் இந்த பராமரிப்பு தேவை உண்டு) இந்த பராமரிப்புக்குக்காக தூரெடுப்பு(De-Silting) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால் இதற்காகவும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு ஆண்டும் செலவு செய்ய வேண்டும். பெரிய‌ அள‌வு வ‌ருவாயே இல்லாம‌ல் ந‌ட்ட‌த்தில் இய‌ங்க‌ப்போகும் ஒரு கால்வாய்க்கு இது மேலும் பொருள் ந‌ட்ட‌த்தையே ஏற்ப‌டுத்தும். இத‌னால் சேது சமுத்திர‌ திட்ட‌ம் பொருளாதார‌ ரீதியாக‌ இழ‌ப்பை ஏற்ப‌டுத்தும் ஒரு திட்ட‌மே.

தூத்துக்குடி உள்ளிட்ட‌ தென் மாவ‌ட்ட‌ங்க‌ளுக்கு இந்த‌ திட்ட‌த்தின் மூல‌ம் வ‌ள‌ம் பெருகுமா ? சூழிய‌லுக்கு என்ன‌ பாதிப்பு ?

சேது சமுத்திரம் திட்டம் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வளரும், இதனால் தென் மாவட்டங்கள் வளர்ச்சியடையும் என்று சேது சமுத்திர திட்ட ஆர்வலர்கள் கூறினாலும், உண்மை நிலை அதற்கு நேரெதிராகவே உள்ளது. நாம் முன்னரே பார்த்தது போல தூத்துக்குடி துறைமுகத்தில் பெரிய அளவில் வளர்ச்சி இருக்காது அதிகபட்சமாக 10 விழுக்காடு அளவிற்கு சரக்கு பெட்டகப் போக்குவ‌ர‌த்து அதிக‌ரிக்கும். அதே நேர‌த்தில் தூத்துக்குடி உள்ளிட்ட‌ தென் மாவ‌ட்ட‌ங்க‌ளின் பெரும் ப‌குதி வருவாய் மீன‌வ‌ர்க‌ள் மூலமாக‌ வ‌ருப‌வையே. சேது ச‌முத்திர‌ம் திட்ட‌ம் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌ட்டு க‌ப்ப‌ல்க‌ள் அவ்வ‌ழியாக‌ செல்ல‌த் தொட‌ங்கினால் முத‌லில் அந்த‌ ப‌குதியில் மீன்பிடிப்ப‌து சில‌ வ‌ரைமுறைக‌ளுக்கு உட்ப‌டுத்த‌ப்ப‌டும். அதாவ‌து க‌ப்ப‌ல்க‌ள் போக்குவ‌ர‌த்தினால் மீன‌வ‌ர்க‌ள் சில‌ குறிப்பிட்ட‌ தூர‌ம் வ‌ரை ம‌ட்டுமே சென்று மீன் பிடிக்க‌ நிர்ப்ப‌ந்திக்க‌ப்ப‌டுவார்கள்.

சேது கால்வாய் தோண்ட‌ப்ப‌டும் பாக் நீரிணை ப‌குதியில் 54 கிலோ மீட்ட‌ர் தூர‌த்திற்கு 12.8 மீட்டர் ஆழத்திற்கு ம‌ண‌ல் தோண்ட‌ வேண்டும். இவ்வாறு தோண்ட‌ப்ப‌டும் ம‌ண‌ல் மீத‌முள்ள‌ க‌ட‌ல் ப‌ர‌ப்பில் கொட்ட‌ப்ப‌டுகின்ற‌து. இத‌னால் நாக‌ப்ப‌ட்டின‌த்தில் இருந்து இராமேஸ்வ‌ர‌ம் வ‌ரையிலான‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ நுண்ணுயிரிக‌ள் முத‌லில் இற‌க்கும், உணவு ச‌ங்கிலியில் முத‌ல் க‌ண்ணியாக இருக்கும் நுண்ணுயிரிக‌ளின் இற‌ப்பு க‌ட‌லின் உண‌வு ச‌ங்கிலி ச‌ம‌த்துவ‌த்தை கெடுத்து கொஞ்ச‌ம், கொஞ்ச‌மாக‌ ம‌ற்ற‌ க‌ட‌ல் வாழ் உயிரினங்கள் இற‌ப்ப‌த‌ற்கு வ‌ழி ச‌மைக்கும். அடுத்து இராமேஸ்வ‌ர‌த்தில் இருந்து த‌லைம‌ன்னார் வ‌ரையுள்ள‌ ம‌ண‌ல் திட்டுக‌ளை ஒட்டியே ம‌ன்னார் வளைகுடா ப‌குதி உள்ள‌து. இந்த‌ ம‌ன்னார் வ‌ளைகுடா ப‌குதியான‌து அரிய‌ வ‌கை க‌ட‌ல் வாழ் உயிரின‌ங்க‌ளும், ப‌வ‌ள‌ப்பாறைகளும்(இது ஒரு‌ க‌ட‌ல் தாவ‌ரம்) இருக்க‌க்கூடிய‌ ஒரு ப‌குதி.இந்த‌ ப‌வ‌ள‌ப்பாறைக‌ளே அரிய‌ வ‌கை க‌ட‌ல் வாழ் உயிரின‌ங்க‌ளும், மீன்க‌ளும் இந்த‌ ப‌குதியில் இருக்க‌க்கார‌ண‌ம். இந்த‌ ப‌வ‌ள‌ப்பாறைக‌ள் சூரிய‌ ஒளியின் மூல‌ம் வாழ்ப‌வை. சேது கால்வாய் திட்ட‌த்தில் வ‌ரும் இந்த‌ ம‌ண‌ல் திட்டுக்க‌ளுக்கு அடியில் சுண்ணாம்பு பாறைக‌ள் உள்ள‌ன‌. இந்த‌ சுண்ணாம்பு பாறைக‌ளை வெடி வைத்து அக‌ற்றுவ‌த‌ன் மூல‌மாக‌வே கால்வாய்க்கான‌ வ‌ழிய‌மைக்க‌ முடியும். இந்த‌ திட்ட‌த்தின் அக‌ல‌ம் 300 மீட்ட‌ர்க‌ளே என்றாலும் இந்த‌ ம‌ண‌ல் திட்டுக‌ளுக்கு கீழே வ‌லுவாக‌ அமைந்துள்ள‌ சுண்ணாம்பு பாறைக‌ளை வெடி வைத்து அக‌ற்றுவ‌த‌ன் மூல‌ம் ஏற்ப‌டும் க‌ல‌ங்கள் த‌ன்மை (Turbidity)என்பது அருகிலுள்ள‌ ம‌ன்னார் வ‌ளைகுடாவையும், அங்குள்ள‌ ப‌வ‌ள‌ப்பாறைக‌ளையும் வெகுவாக‌ப் பாதிக்கும். இத‌னால் அத‌னை சார்ந்து வாழும் எல்லா அரிய வ‌கை உயிரின‌ங்க‌ளையும், மீன்வ‌ள‌த்தையும் பாதிக்கும். அதும‌ட்டுமின்றி வெடி வைத்து ப‌ல நூற்றாண்டு கால‌மாக‌ இருக்கும் சுண்ணாம்பு பாறைக‌ளை அக‌ற்றுவ‌து என்ப‌து ம‌ன்னார் வ‌ளைகுடாவின் அடித்த‌ள‌த்தை வெகுவாக‌ பாதிக்கும்.

கால்வாய் தோண்டுவ‌தினால் ஏற்ப‌டும் சூழ‌ல் பாதிப்பினாலும், தொட‌ர் க‌ப்ப‌ல் போக்குவ‌ர‌த்தினாலும் (மேற்கு – கிழ‌க்கு , கிழ‌க்கு- மேற்கு க‌ட‌ல் வ‌ழி வ‌ர்த்த‌க‌ம்) நாக‌ப்ப‌ட்டின‌ம் முத‌ற்கொண்டு தூத்துக்குடி வ‌ரையிலான‌ மீன்வ‌ள‌ம் அழிவ‌தால், இத‌ன் மூல‌ம் மீன‌வ‌ர்க‌ள், மீன‌வ‌ர்க‌ள் சார்ந்துள்ள‌ தொழில்க‌ள் எல்லாம் கொஞ்ச‌ம், கொஞ்ச‌மாக‌ அழியும் நிலை ஏற்ப‌டும். இதை மன்மோகன் சிங் அமைத்த அறிவியலாளர் பச்சூரி தலைமையிலான குழு தெளிவாக தனது அறிக்கையில் சொல்லியுள்ளது. வழமை போலவே இந்த அறிக்கையை அரசு பரணில் எறித்து விட்டது.(6,7,8,9) தென் மாவ‌ட்ட‌ம் வ‌ள‌மாவ‌த‌ற்கு ப‌திலாக‌ அழியும் நிலைதான் ஏற்ப‌டும், த‌மிழ‌க‌த்தில் க‌ட‌ந்த‌ இர‌ண்டு ஆண்டுக‌ளாக‌ இருக்கும் க‌டும் மின்வெட்டால் தென்மாவ‌ட்ட‌ங்க‌ளில் க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ தொழிற்வ‌ளைய‌ங்க‌ளில் உள்ள‌ தொழிற்சாலைக‌ள் மூடும் நிலையில் உள்ள‌ன‌. இந்த‌ நிலையில் மீன‌வ‌ர்க‌ள், மீன‌வ‌ர்க‌ள் சார்ந்துள்ள‌ தொழில்க‌ள் எல்லாம் அழிவ‌தால் ஒட்டுமொத்த‌மாக‌ தென் மாவ‌ட்ட‌ம் பாதிக்க‌ப்ப‌டும்.

இந்த‌ திட்ட‌த்தின் இப்போதைய‌ நிலை என்ன‌? த‌மிழ‌க‌ க‌ட்சிக‌ளின் இந்த‌ திட்ட‌த்தை ப‌ற்றிய‌ நிலை என்ன‌?

இந்த‌ திட்டத்திற்கு 2007ல் உச்ச‌நீதிம‌ன்றம் இடைக்கால‌ த‌டை விதித்துள்ளது. இந்த வழக்கு இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த‌ ஆண்டு ஜெ தலைமையிலான த‌மிழ‌க‌ அர‌சு சேது ச‌முத்திர‌ திட்ட‌த்தை நிறுத்த‌க்கோரி ம‌னு தாக்க‌ல் செய்துள்ள‌து(10). மதமாற்ற தடை சட்டம் போன்ற‌வை மூலம் ஜெய‌ல‌லிதாவின் இந்துத்துவ‌ பாச‌ம் எல்லோருக்குமே வெளிப்ப‌டையாக‌ தெரிந்த‌து தான். அதே போல‌ இங்கும் இராமேஸ்வ‌ர‌த்தில் இருந்து த‌லைம‌ன்னார் வ‌ரை உள்ள‌ ம‌ண‌ல் திட்டை இந்துக‌ள் இராம‌ர் பால‌ம் என்று புராண கதைகளை ஆதாரமாகக் கொண்டு மூடநம்பிக்கை (இதை ஆதாம் பாலம் என்றும் சிலர் நம்புகின்றனர்) கொண்டிருப்பதே இந்த‌ திட்ட‌த்தை இப்பொழுது ஜெ கைவிட‌ சொல்ல‌க்காரணம், அதை வெளிப்ப‌டையாக‌ சொல்லாம‌ல் மீன‌வ‌ர்க‌ளின் வாழ்வாதார‌த்தையும், சூழ‌லையும் கார‌ணமாக‌ காட்டியுள்ளார். கூட‌ங்குள‌த்தில் சூழ‌லையும், மீன‌வ‌ர்க‌ளையும் எப்ப‌டி ஜெய‌ல‌லிதா காத்துவ‌ருகின்றார் என்ப‌து நாம் அறியாத‌த‌ல்ல‌… தி.மு.க‌ இந்த‌ திட்ட‌த்தை ஆத‌ரிப்ப‌த‌ற்கான‌ கார‌ண‌ம் இது த‌மிழ‌னின் 150 ஆண்டு கால‌ க‌ன‌வு என்று கூறி வந்தாலும், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் சேது கால்வாய் வழி செல்லக்கூடிய சிறிய க‌ப்ப‌ல்க‌ளுக்கு முத‌லாளிகளாக‌ இருப்பதும் ஒரு காரணம்.

மீன‌வ‌ர்க‌ளின் வாழ்வாதார‌த்திற்கும், சூழ‌லுக்கும் பேர‌ழிவையும், பொருளாதார‌ அள‌வில் எந்த‌ ஒரு ப‌ய‌னும் அற்ற‌ சேது கால்வாய்த்‌ திட்டத்தை ஒட்டுமொத்த‌மாக‌ கைவிட‌ வேண்டும் என்பதே இதுவே சனநாயக சக்திகளின் நிலைப்பாடாக உள்ளது.

நன்றி – ஆர்.ஆர்.சிறீனிவாசன், இராகேஷ், விஜய்.

நற்றமிழன்.ப‌
சேவ் தமிழ்சு இயக்கம் (Save Tamils Movement)

தரவுகள்:

1) http://sethusamudram.gov.in/projectstatus/status.htm
2) http://www.business-standard.com/article/economy-policy/shipping-ministry-to-double-cost-estimates-of-sethusamudram-project-110010500015_1.html
3) http://sethusamudram.info/content/view/62/30/
4) http://timesofindia.indiatimes.com/home/opinion/sa-aiyar/swaminomics/150-year-dream-for-150-year-old-ships/articleshow/2393766.cms?
5) http://sethusamudram.info/content/view/50/30/
6) http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2285503/Pachauri-committee-punctures-holes-government-claims-controversial-Sethusamudram-canal-project.html
7) http://www.thehindu.com/sci-tech/energy-and-environment/pachauri-warns-of-ecological-consequences-on-sethusamudram/article4591153.ece
8) http://sethusamudram.info/content/view/36/27/
9) http://sethusamudram.info/content/view/30/27/
10) http://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-nadu-plea-to-scrap-sethusamudram-project/article4667030.ece

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி யாருக்கு சேவகம் செய்ய இந்த ஏற்பாடு ?

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்ற தமிழக அரசின் அறிவிப்பு, கல்வியாளர்களாலும், அறிஞர்களாலும், உணர்வாளர்களாலும் பல்வேறு தளங்களில் பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் கடும் எதிர்ப்புகளுக்கும் ஆளாகி வருகிறது.ஆனால் பெருவாரியான மக்கள், ஏழைகளுக்கும் ஆங்கில வழிக்கல்வி கிடைக்கப் போகிறதே என்ற ஆதரவான மனநிலையில் தான் இருக்கின்றனர். இந்த “இங்கிலிஷ் மீடிய” போதை என்பது அணுஉலை வந்து விட்டால் மின்சாரம் கிடைத்து விடும் என்ற போதைக்கு நிகரானது. ஆங்கில வழிக்கல்வியில் பயின்று விட்டால் ஆங்கில அறிவு வளர்ந்து விடும். எனவே உயர்கல்வி, பன்னாட்டு நிறுவன வேலை என பிய்த்து உதறிவிடலாம் என்ற பொதுக்கருத்தே ஆங்கில வழிக்கல்வியை ஆதரிக்கச் செய்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு, அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை அடித்தட்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மீதான உண்மையான அக்கறையோடு தான் வெளியிடப்பட்டதா? இந்த அறிவிப்பு அடிப்படையில் யாருக்கு சேவகம் செய்யப் போகிறது ? என்ற பல கேள்விகளுக்கான விடையை யதார்த்த நிலையிலிருந்து அணுக வேண்டியிருக்கிறது.

ஏழை தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வரமா? சாபமா ?

கடந்த ஆண்டு சென்னையில் சில குடிசைகள் நள்ளிரவோடு எரிந்து சாம்பலாயின. சென்னை கிரீம்ஸ் ரோடு, மக்கீஸ் கார்டன் போன்ற பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள் அவை. இச்சம்பவம் நடைபெற்ற சில மாதங்களுக்கு முன், அவர்களின் குடிசைகளை விட்டு வெளியேறி சென்னையின் ஒதுக்குப்புறமான கண்ணகி நகர், செம்மஞ்சேரி பகுதிகளுக்கு குடியேறுமாறு ஆணையிட்ட சென்னை மாநகராட்சியை புறக்கணித்த அம்மக்களுக்கு கிடைத்த பரிசு அது. போராட்டத்தில் குதித்த அம்மக்கள் அக்குடிசைகளை விட்டு வெளியேற மாட்டோம் என்று உறுதியாக நின்றதற்கு, இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன.

ஒன்று அரசு மருத்துவமனை வெகு அருகாமையில் இருப்பது. மற்றொன்று கல்வி. அம்மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானாலும் பரவாயில்லை என்று தம் குழந்தைகளை நகரத்திற்குள் அமைந்திருக்கும் தனியார் பள்ளிகளில் படிக்க வைத்திருந்தினர். அதில் ஒரு சிறுமி சர்ச் பார்க் கான்வென்ட் சீருடையோடு வந்து ஒலிபெருக்கியில் பேசினாள். “நாங்க இங்க தான் இருப்போம். எங்கயும் போக மாட்டோம்!”

நான் மேலே கூறிய நிகழ்வை, ஏழைகள் கூட தனியார் பள்ளிகளில் படிக்க முடிகிறதே என்று தட்டையாக புரிந்து கொள்ளக் கூடாது. தரமான கல்வி தனியாரில் தான் கிடைக்கும், அரசு பள்ளிகளில் கிடைக்காது என்ற தொடர் ஊடக பிரச்சாரத்தின் மூலம் நமது சமூகத்தில் உள்ள பொது கருத்து மற்றும் ஆங்கிலம் மீதான மக்களின் மோகம், அவ்வெளிய பெற்றோரை தனியாரை நோக்கி ஓட வைத்திருக்கிறது. இப்ப‌டி எல்லா ஏழை ம‌க்க‌ளாலும் த‌னியாரை நோக்கி ஓட‌ முடியுமா என்ன‌ ?

இன்றைய அரசு பள்ளிகளின் நிலைமை என்ன? அடிப்ப‌டை வச‌திக‌ளான‌ க‌ழிவ‌றையிலிருந்து, வ‌குப்ப‌றை முத‌ல் ஆசிரிய‌ர்க‌ள் வ‌ரை பெய‌ர் சொன்னாலே போதும் த‌ர‌ம் எளிதில் விள‌ங்கும் நிலைமை தான். மேலும் இருக்கும் ஒரு மொழிப்பாடமான ஆங்கிலத்தை கற்றுக் கொடுக்கவே சரியான ஆசிரியர்கள் அரசு பள்ளிகளில் இல்லை, இருக்கும் ஒரு சிலரும் மாணவர்களுக்கு முறையாக பயிற்றுவிப்ப‌தில்லை.( தனியார் ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளிலேயே ஆங்கில மொழிப் பாடம் சரியாக கற்றுக் கொடுக்கப்படுவதில்லை) எனவே ஆங்கில பாடத்திற்கு மட்டும் தனியாக சிறப்பு பயிற்சி வகுப்பு(Tution) வைத்துக் கொள்ளும் சூழல் ஏற்கெனவே இருக்கிறது. ஆக அரசு பள்ளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யாமல், அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல்,ஆங்கில வழிக்கல்வியை திணிப்பதில் ஒரு வியாபார நோக்கமிருப்பதை யூகிக்க முடிக்கிறது. அது என்ன வியாபார நோக்கம் என்பதை பிறகு பார்ப்போம்.

அரசு பள்ளிகளில் யார் அதிகம் படிக்கிறார்கள்? தாழ்த்தப்பட்ட, ஏழை, அடித்தட்டு மக்களின் குழந்தைகள் தான். இவர்களில் பெரும்பான்மை முதல் தலைமுறை கல்வி பெறுபவர்களாகவே இருக்கின்றனர். ஒரு குழந்தை கல்வியுலகில் காலடி எடுத்து வைத்து, தன் தாய்மொழியை கற்குமுன்னரே, அன்னிய மொழியான ஆங்கில வழிக்கல்வியை கற்க வேண்டிய அவலத்தை என்னவென்று சொல்ல? உலகின் எந்த பகுதியிலும் நிகழாத கொடுமை இது. அரசு பள்ளிகளில் இருக்கும் பல ஆசிரியர்களால் ஆங்கிலத்தை மாணவர்களுக்கு சரியாகச் சொல்லிக் கொடுக்க தெரியவில்லை, தெரிந்த சில ஆசிரியர்களாலும் கால அட்டவணையின் நிர்ப்பந்தத்தால் ஒருமுறை மட்டுமே ஒரு பாடத்தை சொல்லிக்கொடுக்க வேண்டிய கட்டாயம், அன்னிய மொழியில் ஒரு முறை மட்டுமே சொல்லிக் கொடுப்பதால் அது அரைகுறையாகத் தான் புரியும். வீட்டிற்கு வந்தால் பெற்றோர்களால் சொல்லி கொடுக்க முடியாத சூழல், சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு (Tution)செல்ல முடியாத பொருளாதார நிலைமைகளால், பாதியிலேயே படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு பிள்ளைகள் ஆளாக நேரிடுகிறது. அல்லது இந்த‌ மதிப்பெண் கலாச்சார சமூக அமைப்பில் அவர்கள் திறமை குறைந்தவர்களாக, வாய்ப்புகளை இழப்பவர்களாக முன்னிறுத்தப்படுவார்கள். ஆக குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை நோக்கி வரும் இவ்வெளிய மக்களை இருகரம் நோக்கி வரவேற்கும் திட்டமாக இது நிச்சயம் இருக்க முடியாது. படித்தால் தனியார் பள்ளியில் போய் படி, இங்கே வந்தால் இப்படி தான் இருக்கும் என்று படிக்க வரும் ஏழை மாணவர்களை அரசு பள்ளிகளின் வாயிலோடு அடித்து விரட்டும் ஒரு சூழ்ச்சியாகத் தான் இதைக் கருத முடிகிறது.

மொழிப்பாடங்களை பயிற்றுவிப்பதில்,பயில்வதில் ஆசிரியர்களும் மாணவர்களும் எத்தகைய அணுகுமுறையை கையாள்கின்றனர் ?

மேனிலைப் பள்ளி மாணவர்கள், மொழிப் பாடங்களான தமிழையும், ஆங்கிலத்தையும் தேர்வுகளுக்கு மட்டுமே படிக்கும் வழக்கத்தை பின்பற்றுகின்றனர்.பிரதானமாக கணக்கு,வேதியியல்,இயற்பியல் போன்ற மதிப்பெண் முக்கியத்துவம் வாய்ந்த பாடங்களை மட்டுமே வருடம் முழுதும் அதிக கவனம் செலுத்தி படிக்கின்றனர்.
ஆசிரியர்களும் பிரதான பாடங்களை மட்டுமே சிரத்தையோடு பயிற்றுவிக்கின்றனர். மற்றபடி மொழிப்பாட வகுப்புகள் சற்றே இளைப்பாற வசதியான வகுப்புகளாகத் தான் மாறிப்போயிருக்கின்றன. எனவே அரசோ தனியாரோ எப்பள்ளியானாலும் சரி, குறிப்பிட்ட ஒரு மொழியறிவை மேம்படுத்த‌ வாய்ப்பில்லாத சூழல் தான் எஞ்சியிருக்கிறது. எனவே ஆங்கில வழிக்கல்வியில் கற்றாலும் கூட ஒரு சில ஆங்கில கலைச் சொற்களை கற்றுக் கொள்ள முடியுமே தவிர, ஆங்கில இலக்கண அறிவோ, ஆங்கில இலக்கிய புலமையோ பெற்று விட‌ முடியாது.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியால் யாருக்கு லாபம்?

சமகால சமூக அமைப்பு என்பது மதிப்பெண்களால் கட்டமைக்கப்பட்டு விட்டது. நல்ல கல்வியைத் தேடி பெற்றோர்கள் சென்ற காலம் அருகி, எந்த‌ பள்ளியில் படித்தால் நல்ல மதிப்பெண் கிடைக்கும்? அதன் மூலம் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா? அந்த கல்லூரி மூலம் பன்னாட்டு நிறுவனத்தில் ஐந்திலக்க சம்பளத்தில் ஒரு வேலை கிடைக்குமா என்ற நிலைக்கு சமூக அமைப்பு இறங்கி வந்தாகி விட்டது. குழந்தைகள் பந்தயக் குதிரைகளாக்கப் படுகிறார்கள்.

பெற்றோர்கள் தங்கள் முதலீடுகளுக்கு இலாபமாக,குழந்தைகளின் மதிப்பெண்களைக் கேட்கின்றனர்.எந்த குழந்தை அதிக மதிப்பெண் பெறுகிறதோ, அதுவே அதிகம் விலைபோகும் சந்தைப் பொருளாக்கப் படுகிறது. ஆக போட்டி நிறைந்த இந்த சந்தையுலகில் தான் அரசுகளின் வியாபார யுக்திகளை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே சமச்சீர் கல்வியை முடக்குவதில் தீவிர ஆர்வம் காட்டிய ஜெயலலிதா அரசின் கல்விக் கொள்கையானது தனியார் முதலாளிகளுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுப்பதில் தான் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தால், மெட்ரிகுலேஷன் பேனர் வைத்து அரசு நியமிக்கும் கட்டணத்தை விட அதிகமாக டொனேஷன் என்ற பெயரில் கொள்ளையடிக்க முடியாதே என்ற கவலையில், தனியார் முதலாளிகள் திரண்டு வந்து இத்திட்டத்தை எதிர்த்தனர். அவர்களின் எதிர்ப்பு தோல்வியடைந்தாலும், தற்பொழுது வந்துள்ள அரசின் இந்த அறிவிப்பு அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

அரசுகளின் ஆசிர்வாதம் அவர்களுக்கு எப்போதும் அவர்களுக்கு துணை நிற்கின்றது. இன்றைக்கு ம‌த்தியில் ஆளும் ம‌ன்மோக‌ன் அர‌சு க‌ல்வி, ம‌ருத்துவ‌ம் உள்ளிட்ட‌ எல்லா அடிப்ப‌டை தேவைக‌ளையும் த‌னியாரிட‌ம் கைய‌ளித்து வ‌ருகின்ற‌து. அத‌ன் ஒரு ந‌ட‌வ‌டிக்கைகாக‌ தான் த‌னியார் ப‌ள்ளிகூட‌ங்க‌ளில் ப‌டிக்கும் ஏழை மாண‌வ‌ர்க‌ளுக்கான‌ க‌ல்வி க‌ட்ட‌ண‌த்தை அர‌சே செலுத்தும் திட்ட‌ம். இந்த‌ திட்ட‌த்தில் அதிக‌ள‌வு மாண‌வ‌ர்க‌ளை சேர்க்க‌ வைப்ப‌த‌ற்காக‌வே ஜெய‌ல‌லிதா அர‌சு இந்த‌ அறிவிப்பை வெளியிட்டுள்ள‌து.

தனியார் நிறுவனங்களும், அறக்கட்டளைகளும் பள்ளிக்கூடங்களைக் கட்டி, அதற்கு அரசு உதவி பெறும் ( Government Aided ) அமைப்புகளாகும் நடைமுறை தான் வழக்கத்தில் இருந்தது.தமிழகத்தின் பெருவாரியான கிறித்துவ அமைப்புகள் இப்படியான அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களை நடத்தி வருகின்றன. ஆனால் நிலைமை இப்போது தலை கீழாக மாறி வருகின்றது. அரசு பள்ளிக்கூடங்களைக் கட்டி, அதை தனியார் வசம் ஒப்படைக்கும் புதிய கொள்கை நடைமுறைக்கு வருகிறது.25 லட்சம் முன்பணமாக கட்டும் எந்த தனியார் முதலாளியும் அரசு பள்ளிகளை ஏற்று நடத்தலாம். தங்கள் விருப்பம் போல கட்டணமும் வசூலித்துக் கொள்ளலாம்.மாலை நேர சிறப்பு வகுப்புகள் வைத்து, தமக்கு தேவையான அடிமைக் கல்வியை போதிக்கலாம் என்ற தனியார் மயமாக்கலுக்கு முழுவீச்சில் அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது. இந்த புதிய கொள்கை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல், தரத்தை உயர்த்தாமல் எப்படி கருணாநிதி, மருத்துவ‌ காப்பீட்டு திட்டம் என்ற ஒன்றை உருவாக்கி, தனியார் மருத்துவமனைகளுக்கு லாபம் ஈட்டிக் கொடுத்தாரோ, அதே பாணியில் இப்போது ஜெயலலிதா அரசு, அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்க, ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்துகிறது. அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை விகிதம் ஏற்கெனவே வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், ஆங்கில வழிக்கல்வி மூலம் அச்சேர்க்கை விகிதத்தை உயர்த்தி அதை தனியார் வசம் ஒப்படைப்பது, சேர்க்கை விகிதம் குறைந்தால் இருக்கும் பள்ளிகளை மூடிவிடுவது என்பதைத் தான் அரசு அமல்படுத்தப் போகின்றது. ஆகவே ஆங்கில வழிக்கல்வி அறிமுகப்படுத்துவதினால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தாலும், குறைத்தாலும் லாபமென்னவோ தனியாருக்கு தான்.

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி வெறும் மொழிப்பிரச்சினை மட்டுந்தானா?

தாய்மொழியில் கல்வி கற்பதால் தொழிற்நுட்பத்திலும் வளர்ச்சியிலும் சக்கைபோடு போடும் சீனா, ச‌ப்பான், செர்மனி என பல எடுத்துக்காட்டுகள் நம் முன் வைக்கப்படுகின்றன. தாய்மொழியில் கல்வி கற்பதால் என்னென்ன சிறப்புகள் என்று ஓராயிரம் கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. அரசால் அமைக்கப்பட்ட எல்லா ஆணையங்களும் தாய்மொழி வழியில் தான் கல்வி இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தும் உள்ளன. இருப்பினும் பொதுபுத்தியில் உறைந்து போயிருக்கும் அந்த ஆங்கில‌ மோகம், ஆங்கிலத்தை வளர்த்துக் கொள்ளக் கூடிய ஒரு ஆற்றலாக (Skill) பார்க்காமல், ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதையே ஒரு அறிவாக, ஆங்கிலத்தில் பேசுபவர்களை மேதைகளாக பாவிக்கக் கூடிய அவல நிலையைக் காண்கிறோம்.

அது மட்டுமின்றி, நம் வாழும் சமூகத்தில் கல்வி என்பது சாதிய கட்டமைப்புக்கு நிகரான ஒரு அடுக்குமாடி வழிமுறையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. “வேதம் ஓதும் சூத்திரன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று! என்கிற மனுதர்மம், தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி உரிமையை அடிப்படையிலேயே மறுக்கிறது. அந்த மனு விஷத்தை குடித்து வாழும் சமகால இன்டெக்லெக்ச்சுவல் பார்ப்பன சமூகம், அதன் வன்மத்தை எல்லா ஆதிக்க சாதி சமூகத்திலும் தூவிப் பார்க்கிறது.பார்ப்பனிய, சத்திரிய,வைசியர் என்ற வர்ண அடுக்குமுறையானது, கல்வியிலும் CBSE, Metriculation, State Board, தனியார்,அரசு பள்ளிகள் என்று பேதத்தை விளைவிக்கிறது. அக்கட்டமைப்புகளின் அடித்தளத்தை உலுக்கும் ஒரு முயற்சியாக அமைந்த சமச்சீர் கல்வியை, பத்மா சேஷாத்ரி வகையறா தனியார் , பார்ப்பனீய முதலாளிகள் தான் முன்னணியில் நின்று எதிர்த்தனர். வெண்ணெய், நெய் உண்டு ஆச்சாரமாக வாழும் உயர்சாதியும், சாக்கடை அள்ளுபவனும் ஒரே கல்வியை கற்பதா என்ற அடிப்படை மனுதர்ம சிந்தனை, வியாபார நோக்கங்களைக் கூட மிஞ்சி நிற்கின்றது.பார்ப்பனீயமும், முதலாளித்துவமும் கை கோர்ப்பது இந்த புள்ளியிலிருந்து தான்.

கல்வி தனியார் மயமாவது முதலாளிகளின்,அரசுகளின் லாபவெறி என்றால், அதோடு தாய்மொழி புறக்கணிக்கப்படுவதும் ஒரு திட்டமிட்ட இன, கலாச்சார ஒடுக்குமுறை தான்.ஜெயலலிதா ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சியின் மீதான‌ தனது தாக்குதல்களை தொடர்ந்து தொடுத்துக் கொண்டிருக்கிறார். போரில் ஒரு நாட்டின் இராணுவம், எதிரி நாட்டை தாக்கும் போது, நூலகங்களைத் தான் திட்டமிட்டு முதலில் அழிப்பார்களாம்.சமச்சீர் கல்வியை எதிர்ப்பதும், கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக்குவேன் என வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதும்,செம்மொழி நூலகத்தை செல்லரிக்க விடுவதும் வெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சியாக,லாப நோக்குக்காக என மட்டுமே பார்க்காமல் தமிழ் இன,மொழி மீதான படையெடுப்பாக, ஒரு இனத்தின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையாக பார்த்தால் அந்த உண்மை புரியும். ஆகவே கல்வி மீதான எந்த ஒரு ஒடுக்குமுறையும், சமூக நீதியின் மீதான தாக்குதல் தான்.

– அ.மு.செய்யது
சேவ் தமிழ்சு இயக்கம்

சிலுவையில் தொங்கும் சாத்தான்

சிலுவையில் தொங்கும் சாத்தான்

“ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இருக்கும் எங்க‌ள் பிதாவே(முத‌லாளியே)!

உங்க‌ள் திவ்விய‌ நாம‌ம் போற்ற‌ப்ப‌டுவ‌தாக‌!

உங்க‌ள் ராஜ்ஜிய‌ம் வ‌ருவ‌தாக‌,

எங்க‌ள் செல்வ‌மிக்க ஆப்பிரிக்காவில்

விரும்பி அழைக்கும் ஆப்பிரிக்காவில்

காலனீய ஆட்சிக்காலத்தில் நடந்ததைப் போலவே

இப்போதும் உங்கள் விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதாக,

இன்றைய‌ நாளில் எங்க‌ள் தின‌க்கூலிக்குறிய‌ டால‌ரைத் தாருங்க‌ள்.

எங்க‌ள‌து த‌வ‌றுக‌ளை ம‌ன்னித்த‌ருளுங்க‌ள்.

உங்க‌ளுக்கும், எங்க‌ளுக்கும் ச‌வாலாக‌ உள்ள‌ சூழ‌லை வெற்றி

கொள்ள‌ உத‌வி தாருங்க‌ள்.

கருணையை வ‌ழ‌ங்கி உறுதுணையாக‌ இருந்து நாங்க‌ள் உம‌க்கு

என்றும் ப‌ணிவுட‌னும்

ந‌ன்றியுட‌னும் இருக்க‌ ஆத்ம‌ப‌ல‌த்தை அளியுங்க‌ள்.

என்றென்றும், எப்போதும், ஆமென்!”

மேற்கூறிய வரிகளின் மூலம் சுத‌ந்திர‌ம் பெற்ற‌ ஆப்பிரிக்க‌ நாடுக‌ள் முன்னாள் கால‌னீய‌ முத‌லாளிக‌ளுக்காக‌வே விடுத‌லை பெற்ற‌ பின்ன‌ரும் செயல்படுகின்றன என்ப‌தை தெளிவாக‌ கூறுகின்றார். (இதில் ஆப்பிரிக்கா என்ப‌தை எடுத்து விட்டு இந்தியா என்று போட்டு ப‌டித்தால் அப்ப‌டியே பொருந்தி போகின்ற‌து. முதல் வரியில் மட்டும் ஒரு சின்ன‌ மாற்ற‌ம் .. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இருக்கும் எங்க‌ள் பிதாவே …. என‌ வ‌ந்தால் இந்திய‌ சூழ்நிலைக்கு ச‌ரியாக‌ இருக்கும்).

சிலுவை என்றாலே எல்லோருடைய‌ ம‌னதிலும் இயேசு தான் காட்சியளிப்பார் ஆனால் இந்நூல் முழுதும் சாத்தான் தான் காட்சிய‌ளிக்கின்றார். வ‌ரிய‌ங்காவின் சிறு வ‌ய‌து முத‌லே அவ‌ளுக்கு சாத்தானை சிலுவையில் அறைவது போலும் பின்ன‌ர் சில‌ர் வ‌ந்து அந்த‌ சாத்தானை மீட்ப‌தும் போலும் க‌ன‌வுகள் தொடர்ந்து வ‌ருகின்ற‌ன. வரியங்காவை மையப்படுத்தியே நாவல் நகர்கின்றது. நைரோபியில் தான் பார்த்துவந்த வேலையில் முதலாளியின் ஆசைநாயகியாக இருக்க மறுத்ததால், வேலையிலிருந்து நீக்கப்பட்டு, வசிக்கும் வீட்டிலிருந்தும் துரத்தப்படுவதால், மனம் நொந்து அலையும் வரியங்காவின் கைகளுக்கு வருகின்றது அந்த சாத்தானின் விருந்திற்கான‌ அழைப்பு. அந்த விருந்து அவள் பிறந்த சொந்த ஊரில் நடப்பதாலும், வசித்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டதாலும் சொந்த ஊரான இல்மொராக் நோக்கி ப‌ய‌ணிக்கிறார் வ‌ரிய‌ங்கா.

இந்தப் பயணத்தில் அவளுட‌ன், கட்டிட‌ தொழிலாளியான‌ முதூரியும், விவ‌சாயியான‌ வ‌ங்காரியும், க‌ல்லூரியில் நாட்டுப்புற‌ இசை ப‌ற்றி ப‌டிக்கும் மாண‌வ‌னான‌ க‌த்தூய்ரியாவும், சாத்தானின் விருந்தில் கலந்து கொள்ள செல்லும் உள்நாட்டு முதலாளியான முகிராய், அவ‌ர்க‌ள் செல்லும் வாக‌ன‌த்தை ஓட்டும் முவாரா இவ்வ‌றுவரின் கலந்துரையாடலூடாக‌‌ கென்ய‌ விடுத‌லை போராட்ட‌ வ‌ர‌லாற்றையும், விடுத‌லைக்கு பின்னான‌ நிலையையும், அதை மாற்றி மக்களுக்கான சோசலிசத்தை நோக்கி எப்படி பயணிப்பது என்பதையும், ம‌ண்ணின் இசையை, மக்களுக்கான கலையை(பூர்வ‌குடிக‌ளின் இசையை) மீட்டெடுப்ப‌தன் அவ‌சிய‌த்தையும், முதலாளித்துவ‌த்தின் உண்மை முகத்தையும், ம‌த‌மும், அர‌சும் எவ்வாறு முதலாளித்துவ‌த்திற்கு வேலை செய்கின்ற‌ன‌ என்ப‌தையும் விள‌க்குகின்றார் நூலாசிரிய‌ர், இறுதியில் வரியங்கா(தன்னை) சிறுவ‌ய‌தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி ஏமாற்றிய‌ வ‌ய‌தான‌ ப‌ண‌க்கார‌னை கொல்வ‌துடன் நாவ‌ல் முடிகின்ற‌து……

“மதம் ஒரு அபின் -கார்ல் மார்க்ஸ்”

மக்களை அடிமைத்தனத்திலேயே வைத்திருக்க ஐரோப்பிய காலனீய ஆட்சியாளர்கள் தங்களது மதத்தை பூர்வகுடிகள் மத்தியில் திட்டமிட்டு பரவச்செய்தனர். இதுதான் கென்யாவிலும் நடந்தது. பண்பாட்டு, கலாச்சார தளத்தில் மக்களிடையே தங்களது ஆதிக்கத்தை செலுத்த காலனீய ஆட்சியாளர்கள் கிருத்துவ மதத்தை பூர்வகுடிகளிடம் திணித்தார்கள். ஆட்சியதிகாரம் பூர்வகுடிகள் கைகளுக்கு வந்த பின்னரும், அது மக்களுக்கான சுதந்திரமாக இல்லை. அதனால் எத்தகைய விடுதலை மக்களுக்கு வேண்டும் என விரிவாகவும், விளக்கமாகவும் கூறுகின்றார் நூலாசிரியர்.

கென்ய‌ ம‌க்க‌ளின் விடுத‌லை என்ப‌து ஆட்சிய‌திகார‌ த‌ள‌த்தில் ம‌ட்டும‌ல்ல‌, ப‌ண்பாட்டு, க‌லாச்சார‌ த‌ள‌த்திலும் நிக‌ழ‌ வேண்டும், அதுமட்டுமில்லாமல் ஆட்சியாளர்கள் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கானவர்களாக இருக்க வேண்டுமேயன்றி ஒரு சில முதலாளிகளுக்காக இருக்கக்கூடாது என்ப‌தில் நூலாசிரிய‌ர் கூகி வா தியாங்கோ மிக‌வும் உறுதியாக‌ இருந்துள்ளார் என்ப‌து இந்த‌ நூலில் தெளிவாக‌ தெரிகின்ற‌து.

ஆட்டின் தோலை உரிப்ப‌த‌ற்கு தோதான‌ வ‌ழி த‌லைகீழாக‌ க‌ட்டி உரிப்ப‌து, அந்த‌ வ‌ழிமுறையையே இங்கு கூகி ப‌ய‌ன்ப‌டுத்தியுள்ளார். சிலுவையில் தொங்கும் சாத்தானும், சாத்தானை காப்பாற்ற‌ விளையும் சில‌ ப‌ண‌க்கார‌ர்க‌ளின் மூல‌ம் முத‌லாளித்துவ‌த்தையும், ம‌த‌த்தையும் ஒன்று சேர்த்து தோலுரித்து காட்டுகின்றார்.

“தொழிலாளிக‌ளின் ம‌த‌ச்சார்பைப் பொறுத்து ப‌ண்ணையில் ச‌ர்ச்சுக‌ளையோ, ப‌ள்ளிவாச‌ல்க‌ளையோ முத‌லாளி க‌ட்டுவான். சாமியார்க‌ளை வேலைக்கமர்த்துவான் . ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழ‌மையும் தொழிலாளிக‌ளுக்கு பிர‌ச‌ங்க‌ங்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌டும். அங்கே ம‌னித‌ விய‌ர்வை, ர‌த்த‌த்தை, மூளையை க‌ற‌க்கும் அமைப்பு க‌ட‌வுளாலேயே விதிக்க‌ப்ப‌ட்ட‌து, என்றும் அத‌ற்கும், இறுதியில் அவ‌ர்க‌ளுடைய‌ ஆத்மா மோட்ச‌ம‌டைவ‌த‌ற்கும் தொட‌ர்பு உண்டு என்றும் அவ‌ர்க‌ளுக்கு போதிக்க‌ப்ப‌டும். திருவிவிலிய‌ நூலில் போதிக்கப்பட்டிருப்பது போன்று “வ‌ருத்த‌ப்ப‌ட்டு பார‌ம் சும‌க்கிற‌வ‌ர்க‌ள் பாக்கிய‌வான்கள்; ஏனெனில் அவ‌ர்க‌ள் தேறுத‌ல் பெறுவார்கள்”. “நீதிமான்க‌ளாய் இருப்ப‌த‌ற்கே ப‌சியிலும், துன்ப‌த்திலும் துன்புறுப‌வ‌ர்க‌ள் பாக்கிய‌வான்க‌ள்; ஏனெனில் அவ‌ர்க‌ள் ஆசிர்வ‌திக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள்”.

ப‌ண்ணையின் முத‌ன்மையான‌ பாட‌லான‌ சாம்பாகீத‌ம் இப்ப‌டி இருக்கும்:

உன் பாவ‌ங்க‌ளுக்காக‌

நீ அழுது புல‌ம்பினாலும்

உன் சிலுவையை நீ சும‌ந்தாலொழிய‌

இளைப்பாறுத‌ல் பெற‌ மாட்டாய். “

“க‌ண்ணுக்குக் க‌ண், ப‌ல்லுக்குப் ப‌ல்லா? அந்த‌ அள‌வுக்கு ச‌கிக்க‌ முடியாத‌ வ‌ன்முறை நில‌வினால் உல‌க‌ம் என்ன‌வாகும்?

ஆம், ஒரு ஏழை த‌ன் க‌ண்ணுக்கும், ப‌ல்லுக்கும் பிர‌தி கேட்கும் போது தான் அது வ‌ன்முறையாகிவிடுகிற‌து. முத‌லாளிக‌ள் தொழிலாளியின் ப‌ல்லை துப்பாக்கி க‌ட்டையால் உடைக்கிறார்க‌ளே, அது வ‌ன்முறையில்லையா? அத‌னால் தானே இந்த‌ முத‌லாளிக‌ள் கால‌ம் முழுதும் ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ தொழிலாளிக‌ளின் முதுகிலேயே ஏறி உட்கார்ந்து கால‌ம் க‌ழிக்கிறார்க‌ள்? தொழிலாளிக‌ளும் வார‌ம் த‌வ‌றாம‌ல் கோயிலுக்குப் போய் அடிமைத்த‌ன‌த்தின் போத‌னையைக் கேட்டுவ‌ருகிறீர்க‌ள்.

நான் உன‌க்குச் சொல்லுகிறேன்

தீமைக‌ளை எதிர்க்காதே.

எவ‌னாவ‌து உன்னை வ‌ல‌து க‌ன்ன‌த்தில் அறைந்தால்

அவ‌னுக்கு உன் ம‌றுகன்ன‌த்தையும் காட்டு.

எவ‌னாவ‌து உன்மீது வ‌ழ‌க்கு போட்டு

உன் மேலாடையை எடுத்துக் கொள்வானானால்

உன் உள் ஆடையையும் அவ‌னிட‌ம் கொடுத்துவிடு”

முத‌லாளித்துவம் என்கிற சாத்தான் எப்ப‌டியெல்லாம் திட்டமிட்டு ஏழை, எளிய ம‌க்க‌ளின் விய‌ர்வையையும், இர‌த்த‌த்தையும் உறிஞ்சுகின்ற‌து என்ப‌தை பின்வ‌ரும் வ‌ரிக‌ள் தெளிவாக‌ காட்டுகின்ற‌து.

“மாபெரும் விருந்து”

வாருங்க‌ள், வ‌ந்து பாருங்க‌ள்

ந‌வீன‌ திருட்டிலும், கொள்ளையிலும் பேர்போன‌

ஏழு நிபுண‌ர்க‌ளைத் தேர்ந்தெடுக்கும் போட்டி,

வ‌ங்கிக் க‌ட‌ன்க‌ள், ப‌ல‌ப்ப‌ல‌ நிதி நிறுவ‌ன‌ங்க‌ளின்

இய‌க்குன‌ர் ப‌த‌விக‌ள் உள்ளிட்ட‌

ப‌ல‌ப‌ல‌ப்ப‌ரிசுக‌ள்

உங்க‌ள் திற‌மையைச் சோதியுங்க‌ள்!

உங்க‌ள் அதிர்ஷ்ட‌த்தைச் சோதியுங்க‌ள்!

ந‌வீன‌ திருட்டில், கொள்ளையில் போட்டியிட்டு

வெற்றி கிரீட‌த்தை சூட்டிச்செல்ல‌லாம்!

ந‌வீன‌ திருடர்களிலும், கொள்ளைக்காரர்களிலும்

த‌லைசிற‌ந்த‌ ஏழுபேரைத் தேர்ந்தெடுக்கும் போட்டி!

‘ந‌ர‌க‌த்தின் தூதுவ‌ர்க‌ள்’குழுவின‌ரின் இன்னிசை விருந்து!

கையொப்ப‌ம்: விழாத்த‌லைவ‌ர்

மே/பா. திருட‌ர்க‌ள் ம‌ற்றும் கொள்ளைய‌ர்க‌ளின் குகை

இல்மொராக் கோல்ட‌ன் ஹைட்ஸ்

அடிப்படை தகுதி – வெறும் நூறும், ஆயிர‌மும் திருடுப‌வ‌ர்க‌ள் சிர‌ம‌ப்ப‌ட்டு மேடைக்கு வ‌ந்து எங்க‌ள் பொறுமையை சோதிக்க‌ வேண்டாம் , ஒரு முறையாவ‌து கோடிக்க‌ண‌க்கில் திருடி இருக்க‌ வேண்டும்.”

மேற்சொன்ன‌ போட்டியில் க‌ல‌ந்து கொண்ட‌ முத‌ல் போட்டியாள‌ன் மண்ணையும், காற்றையும் விற்க‌ வேண்டும் என்ற‌ த‌ன‌து எதிர்கால‌ திட்ட‌த்தை ப‌ற்றி சொல்வான், இருபது ஆண்டுகளுக்கு முன்பு ந‌ம்மிட‌ம் யாராவ‌து வ‌ந்து குடிநீருக்கு விலை வைத்து விற்பார்க‌ள் என்று சொன்னால் நாம் சிரித்திருப்போம், ஆனால் இன்றைய‌ நிலைமை என்ன‌? அர‌சே குடிநீரை விற்கின்ற‌து. அதை போல‌ தான் மேலே சொன்ன‌ காற்றை விற்கும் திட்ட‌மும், அத‌ற்கான‌ க‌ள‌ப்ப‌ணிக‌ள் ந‌ட‌க்க‌ தொட‌ங்கிவிட்ட‌ன‌. ந‌க‌ர‌த்தில் போதுமான‌ள‌வு காற்றை மாசுப‌டுத்தியாயிற்று. பூங்கா ந‌க‌ர‌ம் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் பெங்க‌ளூரில் தான் சுவாச‌ம் தொட‌ர்பான‌ நோய்க‌ள் அதிக‌மாக‌ உள்ள‌ன‌. மேலும் அந்த‌ போட்டியாள‌னின் சில‌ திட்ட‌ங்க‌ளை இங்கு பார்ப்போம்…

“விவ‌சாயிக‌ளும், தொழிலாளிக‌ளும் பொறுமையிழ‌ந்து, ந‌ம‌து ராணுவ‌ப் ப‌டைக‌ளின் ப‌ல‌த்துக்கு அட‌ங்காம‌ல் திமிறுவார்க‌ளானால், அவ‌ர்க‌ளுக்கு காற்றை விற்க‌ ம‌றுப்ப‌த‌ன் மூல‌ம் சுல‌பமாக‌ ந‌ம் முன் ம‌ண்டியிட‌ச் செய்து விட‌லாம்! ம‌க்க‌ள் ஏதாவ‌து முறையிட்டால், அவ‌ர்க‌ளுக்கு காற்றை வ‌ழ‌ங்க‌ ம‌றுக்க‌லாம்! ம‌க்க‌ள் தாம் கொள்ளைய‌டிக்க‌ப்ப‌டுவதையோ, த‌ம் சொத்தை ந‌ம்மிட‌ம் ப‌றிகொடுப்ப‌த‌ற்கு ம‌றுத்தால் பேசாம‌ல் காற்றுக்குழாயைத் திருகி மூடிவிட‌வேண்டிய‌து தான். அவ‌ர்க‌ள் ப‌த‌றி அடித்துக்கொண்டு ந‌ம்மிட‌ம் ஓடிவ‌ந்து “த‌ய‌வு செய்து எங்க‌ளிட‌மிருந்து திருடுங்க‌ள், இர‌க்க‌மின்றி எங்க‌ளிட‌மிருந்து கொள்ளைய‌டியுங்க‌ள்……” என்று ம‌ன்றாடி ச‌ர‌ணாக‌தி அடையும் வ‌ரை ம‌றுப‌டியும் திற‌ந்து விட‌வே கூடாது”

இதை தான் சில‌ நாட்க‌ளுக்கு முன்னால் நாம் சென்னையில் பார்த்தோம். குடிநீர் கொடுக்கும் நிறுவ‌ன‌ங்க‌ள் சில‌ விதிக‌ளை நிறைவேற்ற‌ வேண்டும் என்று சொல்லி சோத‌னை ந‌ட‌த்திய‌ போது எல்லா நிறுவ‌ன‌மும் வேலையை நிறுத்திவிட்டு ம‌க்க‌ளை த‌ண்ணீரில்லாம‌ல் த‌விக்க‌ விட்ட‌ன‌ர். ம‌க்க‌ளும் எங்க‌ளுக்கு த‌ண்ணீர் கொடுங்க‌ள் என‌ கோரினார்க‌ளே ஒழிய‌ அதை அர‌சு தான் கொடுக்க‌ வேண்டும் என்றோ, இந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ளை முறைப்ப‌டுத்த‌ வேண்டும் என்றோ கோர‌வில்லை.

இந்தியாவின் இன்றைய‌ நிலைக்கு சிலுவையில் தொங்கும் சாத்தான்க‌ள் நாவ‌ல் எல்லோரும் ப‌டிக்க‌ வேண்டிய‌ ஒரு அருமையான‌ நூல்.

கூகி வா தியாங்கோ

உல‌க‌ இலக்கிய‌ங்க‌ள் எழுத‌ ஒரு இர‌ம்மிய‌மான‌ சூழ‌லும், அமைதியும் வேண்டும் என்று சில‌ர் இப்பொழுது கூறிவருகின்றார்கள், க‌ழிவறை காகித‌த்திலும் கூட‌ உல‌க‌ இல‌க்கிய‌ங்க‌ள் ப‌டைக்க‌லாம், தேவை மக்கள் மீதான அன்பும், புரட்சியின் மீதான நேசமுமே என்பதை நிரூபித்துள்ளார் கூகி வா தியாங்கோ. ஆம் இந்நாவ‌ல் முழுவ‌தும் அவ‌ர் சிறையில் இருந்த கால‌த்தில் க‌ழிவ‌றை காகிதத்தில் எழுத‌ப்ப‌ட்ட‌தே. அதே போல‌ இந்நாவ‌லை எளிமையான‌ த‌மிழில் மொழிபெய‌ர்த்து கொடுத்துள்ளார்கள் தோழ‌ர்.அம‌ர‌ந்தாவும், தோழர்.சிங்கராயரும்.இந்நூல் முதலில் கென்ய பழங்குடிகளின் ஒரு மொழியான கிக்கூயூ மொழியில் வந்து மூன்று பதிப்பு கண்டது. பின்னர் நூலாசிரியர் கூகியாலேயே ஆங்கிலத்தில் “Devil on the Cross” என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆப்பிரிக்க இலக்கிய உலகின் முக்கியமான ஆளுமை கூகி வா தியாங்கோ..

பின் குறிப்பு : இது என‌து இர‌ண்டாவ‌து நூல்நோக்கு க‌ட்டுரை. இக்க‌ட்டுரை ப‌ற்றிய‌ உங்க‌ள‌து க‌ருத்துகளை ப‌கிருங்க‌ள்.

சிலுவையில் தொங்கும் சாத்தான் – கூகி வா தியாங்கோ
த‌மிழில் – அம‌ர‌ந்தா – சிங்க‌ராய‌ர்
வெளியீடு – தாமரைச் செல்வி பதிப்பகம்
31/48, இராணி அண்ணா நகர்,
கலைஞர் நகர், சென்னை-78
தொலைபேசி – 4728326

ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌
சேவ் தமிழ்சு இயக்கம் (Save Tamils Movement)