புறநானூறு

நண்பர் ( அலுவலகத்தில் என் ஜூனியர் ) ஒருவருடன் ஒரு உரையாடலின் போது – வெளிநாட்டு வாய்ப்பை எதிர்பார்த்திருந்த போதிலும் , புது இடம் , புது மனிதர்கள் என்கிற தயக்கம் அவன் பேச்சில் இருந்தது ..உடனே நான் “விடுய்யா …இந்த வயசு ல யாதும் ஊரே யாவரும் கேளிர் .. னு போக வேண்டியது தானே ..” என்று கூறி முடித்தேன் … உடனே அவன் “என்னாங்க சினிமா டயலாக் லாம் விடுறீங்க ” என்று கூறினான் …. மேற்கொண்டு நான் ஏதும் பேசவில்லை ………
சினிமா டயலாக் என்று சொல்பவனிடம் கணியன் பூங்குன்றனார் என்று கூறியிருந்தால் , பதில் இது யாரு?.. 23ம் புலிகேசி படத்துல வில்லன் பெயரா என்று சொல்லியிருப்பான்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர் ..அன்பே எங்கள் உலக தத்துவம் ” – இப்படி ஆரம்பிக்கும் ஒரு தமிழ் திரைபட பாடல் உண்டு

“தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் நன்மொழியே நம் பொன் மொழியாம் ” – கருணாநிதி எழுதி ரஹ்மான் இசை அமைத்த செம்மொழி பாடலில் இப்படி ஒரு வரி வரும் ..

இந்த இரண்டு வரிகளுமே தெய்வத்திரு.கனியன் பூங்குன்றனார் எழுதிய புறநானூறு பாடலின் முதல் இரண்டு வரிகள் ….
அநேகம் தமிழருக்கு இது தெரிந்திருக்கும் ..சிலருக்கு முதல் இரண்டு வரி மட்டும் தெரிந்திருக்கும் … தெரியாதவர் க்கு நமக்கு தெரிந்ததை சொல்லலாம் என்று எண்ணி இந்த பதிவு ….
ராஜகோபாலனுக்கு என்னாயிற்று ? முதலில் குறுந்தொகை , இப்பொழுது புறநானூறு …தமிழ் வெள்ளம் பெருக்கெடுக்கிரதா என்கிற கேள்வி எழும் … வெள்ளம் எடுக்க ஊற்று வேண்டும் ..இங்கு இருப்பதோ சிறு துளிகளே – அதையும் பங்கு போடலாம் என்கிற எண்ணமே …
என் தந்தை வேலை நிமித்தம் காரணமாக நான் பள்ளியில் தமிழ் படித்ததே இல்லை (இன்று வரை வருந்தும் விடயம் அது ஒன்று ) – ஒரு உந்துதலில் தமிழ் படிக்க பயில ஆரம்பித்தேன் ..அதனாலகூட படித்தவர்களுக்கு மறந்தது , எனக்கு மறக்காமல் இருக்கலாம் … கடந்த பதிவில் சொன்னது போல , எனக்கு பிடித்த/ தெரிந்த சங்க கால பாடல்களை பற்றி வரும் பதிவுகளில் இயன்ற அளவு பகிர்கிறேன் ..

முதலில் புறநானூறு என்றால் என்ன ? புறநானூறு சங்க காலத்தை சேர்ந்த ஒரு தொகை நூல் ..அதாவது பல பாடல்கள் கொண்ட ஒரு தொகுப்பு …குறுந்தொகை , புறநானூறு இவ்விரண்டையும் சேர்த்து மொத்தம் எட்டு தொகுப்புகள் உள்ளன , இவைகளை எட்டுத்தொகை என்பர். இதல்லாமல் பத்து நீண்ட பாடல்கள் உள்ளன – அவைகளை பத்துபாடல் என்பர் . இவை இரண்டையும் சேர்த்து மொத்தம் 2381 பாடல்கள் உள்ளன ( 3 வரியிலிருந்து 782 வரி வரை நீளமுள்ளவை ) ..உலகில் எந்த இலக்கியத்திலும் இம்மாதிரியான தொகுப்புகள் இல்லை என்பது நம் பெருமை கணக்கில் இன்னொன்று.
எப்படி பிரித்தார்கள் , ஒவ்வொன்றிலும் இருப்பது என்ன என்பதே பெரிய வரலாறு !

எடுத்து கொண்ட புறநானூறு பற்றி சொன்னால் — இது பல புலவர்கள் பாடின நானூறு பாடல்களின் தொகுப்பு ..
புறம் -> அதாவது காதல் தவிர்த்து ,வெளி உலகம் சார்ந்த விடயங்கள் பற்றி …உதாரணத்துக்கு வீரம் , போர் , நற்குணங்கள் இப்படி போகும் பாடல்கள் …

இப்பொழுது நம் எடுத்து கொண்ட பாடலுக்கு வருவோம் …. நாம் எப்படி வாழ்ந்தோம் ..எப்படி வாழ வேண்டும் ..என்று சொல்வதில் பாரதியாரின் வேடிக்கை மனிதர்கள் , மனதில் உறுதி வேண்டும் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது …. ஒரு அற்புதமான பாடல் …. இதோ உங்கள் பார்வைக்கு பொருளுடன் … ஒவ்வொரு வரி முடிய ஒரு குறியீடு கொடுத்துள்ளேன் – அதை வைத்தே அந்த வரிக்கான பொருளை தெரிந்து கொள்ளலாம்

பாடியவர் —- தெய்வத்திரு . கணியன் பூங்குன்றனார்

பாடல்
~~~~~~~

யாதும் ஊரே ; யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ;
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே ;
முனிவின் இன்னாது என்றலும் இலமே ;
மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று நீர் வழிப்படூ ஊம் புணை போல் ஆர் உயிர் முறை வழிப்படூஉம் என்பது திறவோர் – காட்சியின் தெளிந்தனம் ஆகலின் , மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே ;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே ;

பொருள்
~~~~~~~~~
எல்லா ஊரும் எங்கள் ஊர் ; எல்லோரும் உறவினர் ;
நல்லதும் கெட்டதும் பிறர் கொடுத்து வருவதில்லை ;
அதுபோலதான் வருத்தமும் சாந்தமும் ;
மரணம் புதியதல்ல ;
வாழ்க்கை இனிது என்று அதிகம் சந்தோஷப்படுவதில்லை ;
கோபத்தினால் வெறுப்புமில்லை ;
மின்னல் மின்னி மழை பெய்து கற்களில் உருண்டு செல்லும் ஆற்றுவெள்ளம் போல வாழக்கை என்பதை தெளிவாக தெரிந்து கொண்டோம் அதனால் பெரியவர்களை பார்த்து வியப்படைய மாட்டோம் ;
அதைவிட சிறியவர்களை இகழ்வாய் பேச மாட்டோம் .

…… தமிழாக்கம் தெய்வத்திரு. சுஜாதா ரங்கராஜன் ( புறநானூறு ஒரு எளிய அறிமுகம்)..
பள்ளியில் தமிழ் படிக்காத எனக்கு நிறைய ஆசான்கள் -கண்ணதாசன் , வாலி , வைரமுத்து , சுஜாதா , பால குமாரன் , கல்கி …..இப்படி ..
அந்த வரிசையில் தெய்வத்திரு.சுஜாதா அவர்களின் பங்கு பெரியது … நடைமுறை தமிழையும் சொல்லி கொடுத்த அதே சமயத்தில் சங்க காலத்துடனும் என்னை அறிமுகம் செய்து வைத்தார் … விருப்பமுள்ளவர்கள் அவரின் சங்க கால மொழி பெயர்ப்புகளை வாங்கி படியுங்கள்.

இறுதியாக ஒரு சொல் — இப்படி கடினமான பாடல்களை படித்து என்னா ஆக போகிறது என்கிற கேள்வி எழுபவர்களுக்கு என்னுடைய பதில் இரண்டு (1) உங்களை மனப்பாடம் செய்ய -சொல்லவில்லை .. பொருளை உணர்ந்தாலே மெய் சிலிர்க்கும் (2) பொருளை உணர்ந்தால் நாம் முன்பு எப்படி இருந்தோம் இப்பொழுது எப்படி இருக்கிறோம் என்று தெரியும் – அது உரைத்து விட்டால் புது புத்துணர்ச்சி பிறக்கும்.

வாழ்க தமிழ் .

ரா.ராஜகோபாலன்

நன்றி

முகநூல்

4 thoughts on “புறநானூறு

  1. நல்லதொரு பகிர்வு!
    கேளிர் என்றால் கேளுங்கள் என்று சொல்பவர்களும் உண்டு!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s