எனக்கு பிடித்த விமரிசனம் & கட்டுரை

விகடனில் கலைஞருக்கு எதிராக கட்டுரை – அதிசயம் – ஆனால் உண்மை …!!! – விமரிசனம் – காவிரிமைந்தன்

விகடன் செய்திகள் தளத்தில் இந்த கட்டுரையைப் படித்து
விட்டு பலமுறை என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.

கலைஞர் கருணாநிதியின் தலைமையில்
திமுக சார்பில் நேற்று சென்னையில் ஒரு “பிரம்மாண்ட”
பேரணி நடத்தப்பட்டது.

பேரணிக்கான காரணம் – கோரிக்கை –
செம்பரம்பாக்கம் ஏரியை கால தாமதமாக திறந்து
சென்னையை வெள்ளக்காடாக்கியதைக் குறித்து
விசாரிக்க உடனடியாக உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு
“நீதி விசாரணை” நடத்தப்பட வேண்டும்…!!!

கலைஞர் பேரணி நடத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் – மதியம் 12 மணிக்கு – அதற்கு நேரெதிராக
” செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதில் எந்த வித தவறும்
நிகழவில்லை ” என்று ஆதாரபூர்வமாக, விவரமாக விளக்கும்
ஒரு கட்டுரையை விகடன் செய்திதளம் வெளியிடட்டுள்ளது.

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு, அதிமுக அரசுக்கு
மிகவும் உதவியாக இருக்கக்கூடிய ஒரு கட்டுரையை
விகடன் வெளியிட்டிருப்பது – அதன் பின்னணியைப் பற்றி
பலமாக யோசிக்கத் தூண்டுகிறது. இதன் பின்னால்
நிச்சயமாக ஒரு காரணம், ஒரு உள்நோக்கம் இருந்தேயாக
வேண்டும்.

அது என்னவாக இருக்க முடியும் …?

விகடன் – திமுகவின் சொந்தப் பத்திரிகை என்கிற விஷயம்
வெளியில் பரவலாகப் பரவி விட்டதால்,

– மக்கள் மத்தியில் அதன் நம்பகத்தன்மை
முற்றிலுமாகப் போய் விட்டது என்கிற பேச்சிலிருந்து
வெளியே வர முயற்சியா …?

– அல்லது சரிந்து விட்ட சர்குலேஷனை மீட்கும் முயற்சியா …?

– அல்லது தேர்தல் சமயத்தில் அனைத்து தரப்பினரும்
படிக்கின்ற மாதிரி ஒரு இமேஜை தனது நிறுவனத்திற்கு
வைத்துக் கொண்டால் தான் –
தாங்கள் சொல்வது அனைவரையும் reach ஆகும்.
இல்லையேல் வெறும் முரசொலி மாதிரி திமுக வினர் மட்டுமே
படிக்கும் பத்திரிகையாகி விடும் என்கிற காரணமா …?

இனி நேரே கட்டுரைக்கு போவோமே …!!!

 

சென்னையின் ‘தாய்மடி’ செம்பரம்பாக்கம் ஏரி. தலைநகரின் தண்ணீர் தாகத்தில், 40 சதவீதத்தை தணிப்பது செம்பரம்பாக்கம்தான். சென்னைவாசிகளால் பாசத்தோடு பார்க்கப்பட்ட இந்த ஏரி, சென்னையை மூழ்கடித்த மழை வெள்ளத்திற்குப் பிறகு, சற்று பயத்தோடு பார்க்கப்படுகிறது.

சென்னை மூழ்குவதற்கு, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தாமதமாக தண்ணீரைத் திறந்துவிட்டதே என்ற புதிய காரணம் கண்டுபிடிக்கப்பட்டதால்தான் அந்த பயம்.  செய்தி வெளியானதும் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அதை அப்படியே பேட்டியாகத் தட்டிவிட்டார். தி.மு.க தலைவர் கருணாநிதி, காரணங்களை அடுக்கி கண்டன அறிக்கை வெளியிட்டார். மழையிலும் வெள்ளத்திலும் ஊறிப்போய் கிடந்த சென்னையில், செம்பரம்பாக்கம் பரபரவென பற்றிக் கொண்டது.

கொழுந்துவிட்டெரிந்த செம்பரம்பாக்கத்தின் அனல், அ.தி.மு.க பொதுக்குழுவிலும் அடித்தது.
அதில் பேசிய  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட காலதாமதம் ஏற்பட்டதுதான் சென்னை வெள்ளத்தில் மூழ்கக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றன. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விளக்கமாக அறிக்கை கொடுத்த பின்னரும், மீண்டும் மீண்டும் ஒரே பொய்யை  திரும்பத் திரும்ப எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. மழைக் காலங்களில் ஏரிகளில் நீர் அளவு எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்பது பற்றி ‘வெள்ளநீர் ஒழுங்கு விதிமுறைகள்’ என்பதில் மிகத்தெளிவாக உள்ளது. இது நன்றாகத் தெரிந்தும், வேண்டுமென்றே தி.மு.க.வினர் பொய்ப் பிரசாரம் செய்கின்றனர். இதுபற்றி எதிர்க்கட்சியினருக்கு புரியவில்லை என்றால் 8-ம் வகுப்பு கணிதப் பாடத்தில் உள்ள ‘காலம் மற்றும் வேலை’ பற்றிய கணக்குகளைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்” என்று கொந்தளித்தார்.

இவ்வளவு விவகாரம் கிளப்பிய விஷயத்தில்  உண்மையில் நடந்தது என்ன?

பொதுப்பணித்துறையின் நீர் மேலாண்மைப் பிரிவின் சிறப்புப் பொறியாளர் (ஓய்வு) வீரப்பன்,  செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் இதுதான் நடந்தது என்று சொல்லும் தகவல்கள் இங்கு அப்படியே…
டிசம்பர் 1, 2 தேதிகளில் என்னதான் நடந்தது?

பொறியாளர் வீரப்பனைப் பொறுத்தவரை,  செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு சரியான சமயத்தில்,  தெளிவான திட்டமிடலுடன்தான் திறக்கப்பட்டது என்கிறார். எந்த வீண் தாமதமும், அலட்சியமும் இல்லை என்று அவர் சொல்கிறார். இதற்கான ஆதாரங்களாக அவர் முன்வைக்கும் வாதங்கள் பின் வருமாறு…

1- செம்பரம்பாக்கத்தில் திறக்கப்பட்டது 29 ஆயிரம் கன அடி மட்டுமே..!

டிசம்பர் 2-ம் தேதி சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் மூழ்கியபோது, அந்த இடத்தைக் கடந்த தண்ணீரின் அளவு, 55 முதல் 60 ஆயிரம் கன அடி. இது அத்தனையும் செம்பரம்பாக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்டதல்ல. செம்பரம்பாக்கத்தின் மொத்தக் கொள்ளளவே 33 ஆயிரம் கன அடிதான். உபரி நீரை வெளியேற்ற அங்குள்ள நீர் வெளியேற்றும் வழிகள் மொத்தம் 24. அவை அனைத்தையும் திறந்துவிட்டாலும்கூட 29 ஆயிரம் கன அடி நீர்தான் வெளியேறும். அதனால், அங்கிருந்து 55 ஆயிரம் கன அடி தண்ணீரோ,  60 ஆயிரம் கன அடி தண்ணீரோ திறந்துவிடப்படவில்லை.
2- முதல்நாளே ஏன் திறக்கவில்லை?
‘டிசம்பர் 2-ம் தேதி மொத்தமாக 29 ஆயிரம் கன அடி தண்ணீரை ஏன் திறக்க வேண்டும்? அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கொஞ்சம் கொஞ்சமாக திறந்துவிட்டு இருக்கலாமே…?’ என்பது சிலரின் கேள்வி.

டிசம்பர் 1-ம் தேதி வரை செம்பரம்பாக்கத்திற்கு வந்த நீர்வரத்து வெறும் விநாடிக்கு 960 கன அடி தண்ணீர். அதில் பொதுப்பணித்துறைப் பணியாளர்கள், 900 கன அடி தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளனர். 60 கன அடி தண்ணீரை சேமித்துள்ளனர். இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.

 

ஒன்றாம் தேதி இரவுக்கு முன்புவரை சென்னையிலும்,  அதனைச் சுற்றி உள்ள பகுதியிலும் பெய்த மழையின் அளவு வெறும் 50 மி.மீ .தான். ஆனால், ஒன்றாம் தேதி இரவிலும் அதற்குப் பிறகும்,  மழை பேய்த்தனமாக பெய்யத் தொடங்கியது. 50 மி.மீ  பெய்து கொண்டிருந்த மழையின் அளவு,  கிடுகிடுவென அதிகரித்து 400 மி.மீ க்கு உயர்ந்தது. அதனால், இரண்டாம் தேதி, அணைக்குச் சட்டென விநாடிக்கு, 26 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத் தொடங்கியது. இது ஆபத்து என்று உணர்ந்த பொதுப்பணியாளர்கள்,  அணையிலிருந்து 29 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டனர். இதில் எந்தத் தவறும் இல்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஒன்றாம் தேதி வரை வெறும் 960 கன அடி தண்ணீர்தான் அணைக்கு வந்தபோது, அதில் சரியாக 900 கன அடி  தண்ணீரை பொதுப்பணியாளர்கள் திறந்துவிட்டுள்ளனர்.

ஒன்றாம் தேதி இரவுக்குப் பிறகு சட்டென 26 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து உயர்ந்துள்ளது. அதனால், அதில் 29 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர். 29 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் என்பது எதிர்பார்க்காத ஒன்று. ஏனென்றால், கன மழை பெய்யும் என்றுதான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததே தவிர, 400 மி.மீ  அளவிற்கு அது பெய்யும் என்பது வானிலை ஆய்வு மையம் உள்பட எத்தரப்பும் எதிர்பார்க்காதது. அதுபோல், நாம் நினைப்பதுபோல் முதல் நாளே திறந்துவிட்டிருந்தால், 960 கன அடித் தண்ணீரையும் திறந்துவிட்டிருக்க வேண்டும். அப்படியெல்லாம் செய்ய முடியாது. ஏனென்றால், 1-ம் தேதி இரவுக்குமேல் பெய்த மழையைப்போல் ஒரு ராட்சத மழை பெய்யவில்லை என்றால், மொத்தத் தண்ணீரையும் கடலுக்கு அனுப்பிவிட்டு அணையை காயப்போட்டு வைக்க முடியாது. பிறகு மழை பெய்தும் சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்கும். அப்போது, தண்ணீரை ஒழுங்காகச் சேமித்து வைக்கவில்லை என்று அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனம் கிளம்பும்!

தேதி அணையின் கொள்ளளவு(TMC) ஒரு விநாடிக்கு ஏரிக்கு வந்த நீர் கனஅடியில் ஒரு விநாடியில் ஏரியிலிருந்து வெளியேறிய நீரின் அளவு கனஅடியில்
01.12.2015 3.141 960 900
02.12.2015 3.396 26,000 29,000
03.12.2015 3.094 10,200 11,000
04.12.2015 3.132 4,900 5,000

3 – முதல்வர் ஜெயலலிதா உத்தரவுக்காக காத்திருந்தனரா?

பொதுப்பணித்துறைப் பணியாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கத் தேவையில்லை. வெள்ளம், பெருமழைக் காலம் போன்ற நேரங்களில், அவர்களுக்கு யாருடைய உத்தரவும் தேவையில்லை. தங்களுடைய பொறுப்பில் இருக்கும் ஏரிக்குப் பின்புறம் உள்ள பகுதியைப் பற்றியோ, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கு முன்புறம் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியோ அவர்கள் கருத்தில் கொள்ளமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து, அதில் சேமிக்க வேண்டிய நீரை சேமித்துக் கொண்டு மற்றவற்றை திறந்துவிடுவார்கள். ஒன்றாம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு,  29 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத் தொடங்கியதும்,  அவர்கள் யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கவில்லை. உடனடியாகத் திறந்துவிட்டனர். அவர்கள் யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கவும் தேவையில்லை. ஏனென்றால், அவர்களுக்கு அந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது!

4 – பாசனத்திற்குத் திறப்பது வேறு… வெள்ளச் சமயங்களில் திறப்பது வேறு!

அணையில் சேமிக்கப்பட்டுள்ள தண்ணீரை பாசனத்திற்காக திறக்கும்போது, தலைமைச் செயலாளர், முதலமைச்சரிடம் அனுமதி கேட்பது நடைமுறை. ஏனென்றால், அது குடி நீர் தேவைக்கும் அல்லது எதிர்காலத்தில் தகுந்த விவசாய காலத்திற்கும் ஏற்றவகையில் அவற்றைப் பயன்படுத்தலாமா… அல்லது இப்போது திறந்துவிடலாமா? என்று அனுமதி கேட்பார்கள். ஆனால், மழை வெள்ளம் போன்ற பேரிடர் சமயங்களில் இதுபோன்ற நடைமுறைகளுக்காக காத்திருக்கமாட்டார்கள். கோப்புகள் கையெழுத்தாகி வரும் வரையில் பொறுத்திருக்கத் தேவையும் இல்லை. அதை அந்தந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுப்பணித்துறை பொறியாளர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம். அதுபோல்தான் இப்போதும் நடந்தது. அதனால், தலைமைச் செயலாளர் உத்தரவுக்காகக் காத்திருந்தனர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தவுக்காக காத்திருந்தனர் என்றெல்லாம் சொல்லப்படுவது முகாந்திரமற்றக் குற்றச்சாட்டுக்கள்.

5- நீர் அளவு 29 ஆயிரம் கன அடி எப்படி 60 ஆயிரமானது?

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர்தான் அடையாறாக சென்னைக்கு வருகிறது. அப்படி அது வரும் வழியில் 278 ஏரிகளும், நீர்நிலைகளும் உள்ளன. அந்தத்  தண்ணீரையும் அது உள்வாங்கிக் கொண்டு வருகிறது. மேலும், அன்று முழுவதும் விடாமல் கொட்டிக் கொண்டிருந்த மழையும் அதோடு சேர்ந்து கொண்டது. அந்தத் தண்ணீரெல்லாம் செம்பரம்பாக்கத்தோடு சேர்ந்துதான் 60 ஆயிரம் கன அடி தண்ணீரானது..

6 – 2005ம் ஆண்டு ஏற்படாத சேதம் இப்போது ஏன்?

சைதாப்பேட்டை பாலத்திற்கடியில் தண்ணீர் கடப்பதற்கு மொத்தம் 12 வழிகள் இருந்தன. ஆனால், அவற்றில் 7 அடைக்கப்பட்டுவிட்டது. எல்லாம் ஆக்கிரமிப்புகள். 2005-ம் ஆண்டு 60 ஆயிரம் கன அடித் தண்ணீர் ஓடியபோது, 12 வழிகளும் இருந்தன. ஆனால், இப்போது அவை இல்லையே. பிறகு எப்படித் தண்ணீர் வெளியேறும்? ஆக்ரோஷமாக வரும் வெள்ளம் ஊரைத்தான் காவு வாங்கும்!

7 – சிதைக்கப்பட்ட அடையாற்றின் கரைகள்!

ஒரு ஆறு என்பது தன்னளவில் அகன்று கொண்டே வர வேண்டும். ஆனால், செம்பரம்பாக்கத்தில் இருந்து தண்ணீரைப் பெற்றுக் கொண்டு வரும் அடையாற்றின் கரைகள் எந்தளவிற்கு சிதைக்கப்பட்டு இருக்கிறது என்பதை பார்த்தால், சென்னை வெள்ளத்தில் மூழ்கியதற்கான காரணத்தையும் உணர முடியும்.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் கடலில் கடக்கும் பாதை
அடையாறு மந்தநந்தபுரத்தில்,  105 மீட்டராகவும் ஆழம் 9 மீட்டராகவும் இருந்து,  ஏர்போர்ட் வரும்போது 222 மீட்டர் அகலமாகவும், ஆழம் வெறும்  6 மீட்டராகவும் குறுகிறது. மணப்பாக்கத்தில் அதுவும் குறுகி, அகலம் 112 மீட்டராகவும் ஆழம் 5 மீட்டராகவும் மாறுகிறது. பிறகு, மீண்டும் நந்தம்பாக்கத்தில் ஆற்றின் அகலம் 59 மீட்டராகக் குறுகி, ஆழம்  9 மீட்டராகிவிடுகிறது. சைதாப்பேட்டையில் ஆற்றின் அகலம் 83 மீட்டராகவும், ஆழம் 4 மீட்டராகவும் சிறுத்துவிடுகிறது. அடையாறு பாலத்தின் அருகில்  222 மீட்டர் அகலம் வெகுவாகச்  சுருங்கிப் போய்விடுகிறது.

ஆற்றின் பரப்புக்கு மட்டுமல்ல, ஆற்றின் கரைகளுக்கும் இதுதான் நிலை. ஒருபக்கம் உயர்ந்தும், ஒரு பக்கம் அரிக்கப்பட்டும் கிடக்கிறது. இப்படி இருக்கும்போது, பரந்து வரும் வெள்ளத்தின் வேகம், தன் பாதையில் தடை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அடித்து நொறுக்கிக் கொண்டு போகிறது. இதுபோதாதென்று அடையாற்றின் கரைகளைச் சிதைத்து வைத்துள்ளனர். அதனால்தான், கரையை நாம் பலவீனப்படுத்தி வைத்த இடங்களில், ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. ஆற்றின் ஆழத்தை கட்டுமானக் கழிவுகளால் நிரப்பிய இடங்களில், அது பொங்கி  தெருத் தெருவாக ஓடியது.

அடையாறு ஆற்றுப்படுகையின் ஆக்கிரமிப்புகளை சுட்டிக் காட்டும் வரைபடம்

கடல் நோக்கி செல்லச் செல்ல ஆக்கிரமிப்புகளால் குறுகும் அடையாற்றின் பரப்பளவு!

(பொதுவாக ஆற்றின் இருபக்க கரைகளும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், தாழ்வான கரையில் வெள்ளம் ஏறும். ஆனால், அடையாற்றின் கரைகள் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதையும் கடைசி அட்டவணை  உணர்த்துகிறது!)

செம்பரம்பாக்கத்தில் இருந்து தொலைவு இடத்தின் பெயர் ஆற்றின் பரப்பு ஆற்றின் ஆழம் கரைகளின் உயரம் (இடது -வலது)
8.40 கி.மீ உள்வட்டச்சாலை 116 மீட்டர் 11 மீ 10 மீ -13மீ
13.40 கி.மீ விமானநிலையம் 222 மீட்டர் 6 மீ 8மீ-7மீ
18.40கி.மீ நந்தம்பாக்கம் 59 மீட்டர் 9 மீ 7 மீ-6மீ
23.40கி.மீ சைதாப்பேட்டை 83.3 மீட்டர் 4 மீ 5 மீ -9 மீ
28.80 கி.மீ திரு.வி.க பாலம் 485 மீட்டர் 1 மீ 4 மீ – 5 மீ

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, தாமதமாக தண்ணீர் திறந்துவிட்டதுதான் சென்னை மூழ்கியதற்கு காரணம் என்று சொல்வது சுத்தப் பொய். அதனால், சென்னை மூழ்கவில்லை. தண்ணீரும் அங்கிருந்து தாமதமாகத் திறந்துவிடப்படவில்லை. சரியான நேரத்தில், சரியான அளவில் தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. டிசம்பர் முதல்நாள் வரை ஏரிக்கு தண்ணீர் வரத்து 960 கன அடிதான் இருந்தது. அப்போது 900 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இது சரியான அளவு. ஆனால், 2-ம் தேதி அப்போது பெய்த கனமழையால் தண்ணீரின் வருகை அளவு திடீரென 29 ஆயிரம் கன அடியாகக் கூடியது. அப்போது 26 ஆயிரம் கன அடி தண்ணீரை  திறந்துவிட்டுள்ளனர் பொதுப்பணித்துறைப் பணியாளர்கள். அவர்களுடைய வேலை, ஏரிக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது. எந்த நேரத்தில் அதைத் திறந்துவிட வேண்டும். எவ்வளவு திறந்துவிட வேண்டும் என்பதை கணக்கிட்டு செயல்படுவதுதான்.

ஏரிக்கு அப்பால் நடக்கப்போவதையோ, ஏரிக்கு முன்னால் நடப்பதையோ பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அது அவர்களுடைய வேலையும் இல்லை. தண்ணீர் வரும் பாதையை சரியாக பராமரிக்காமல், சைதாப்பேட்டை பாலத்தில் உள்ள நீர் வெளியேறும் வழிகளை அடைத்து வைத்தால் அதற்கு அவர்களா பொறுப்பு? அதுபோல அடையாற்றின் கரைகளைச் சிதைத்து வைத்துள்ளனர். ஆற்றுக்குள் கட்டுமானக் கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். இதுபோன்ற காரணங்களால்தான் அடையாற்றில் வந்த வெள்ளம் ஊருக்குள் புகுந்து சென்னையை மூழ்கடித்தது.

-ஜோ. ஸ்டாலின் 

படங்கள்: எம். உசேன், ப.சரவணக்குமார், தி. குமரகுருபரன்
நன்றி விமரிசனம் – காவிரிமைந்தன்
நன்றி விகடன்

22 மாடுகள்… மாதம் ஒரு லட்சம்! பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பால் பண்ணை! – விகடன்

ரம்பரையாக மாடு வளர்ப்பவர்களே பால் பண்ணையில் போதிய வருமானம் இல்லை என வேறு தொழில்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில்… “சரியாகத் திட்டமிட்டு செய்தால் பசுக்களில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்து நல்ல லாபம் எடுக்க முடியும்” என்று விரல் உயர்த்துகிறார், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகிலுள்ள தம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத்.

பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த ஹரிபிரசாத்தைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

‘‘நான் சென்னை, பல்லாவரத்துல குடியிருக்கேன். பால் பண்ணை வைக்கணுங்கிற ஆர்வத்துல ஒரு  மணி நேர பயண தூரத்துல இருக்கிற மாதிரி நிலம் தேடுனேன். அப்படி 2001-ம் வருஷம் கிடைச்சதுதான் இந்த நிலம். எங்க வீட்டுல இருந்து 50 கிலோ மீட்டர் தூரம்தான். மொத்தம் மூணே முக்கால் ஏக்கர். பக்கத்துலேயே ரெண்டே கால் ஏக்கர் நிலத்தை குத்தகைக்குப் பிடிச்சிருக்கேன். மொத்தம் ஆறு ஏக்கர். இதுல, நாலு ஏக்கர்ல மாடுகளுக்குத் தேவையான கோ-3, கோ-4, சவுண்டல், அகத்தி மாதிரியான பசுந்தீவனங்களைப் போட்டிருக்கேன். ஒண்ணே கால் ஏக்கர்ல ஏ.டி.டீ-43 நெல் இருக்கு. மீதி இடங்கள்ல கிணறு, மாட்டுக் கொட்டகை, பாதை எல்லாம் இருக்கு.

பயிற்சிக்குப் பிறகு பண்ணை!

பால் பண்ணை வைக்கணும்னு முடிவு பண்ணிட்டதால ‘கே.வி.கே’வில் மாடு, கோழி வளர்ப்பு தொடர்பான பயிற்சிகளை எடுத்துக்கிட்டு… ஆரம்பத்துல ஆறு கலப்பின மாடுகளை வாங்கினேன். அவை மூலமா, தினமும் 20 லிட்டர் வரை பால் கிடைச்சது. தனியார் பால் பண்ணைக்குத்தான் பால் கொடுத்துக்கிட்டிருந்தேன். அதோட, இயற்கை முறையில பசுந்தீவனங்கள், காய்கறி, சோளம், சாமை, தினைனு சாகுபடியும் செய்துட்டு இருந்தேன். சிறுதானியங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால விற்பனைக்கு பிரச்னையில்லை. ஒரு கட்டத்துல சிறுதானிய விவசாயத்துல கவனம் போனதால மாடுகளை சரியா கவனிக்க முடியாமப் போயிடுச்சு. ஆனா, இப்போ மறுபடியும் பால் உற்பத்தியில முழுகவனத்தையும் திசை திருப்பியிருக்கேன்.

கைகொடுத்த வங்கிக்கடன்!

பால் விற்பனைனு மட்டும் நின்னுடாம மதிப்புக் கூட்டல் செய்து கூடுதல் லாபம் பாக்கணும்னு முடிவு பண்ணி… வங்கியில 35 லட்ச ரூபாய் கடன் வாங்கி, பால் பண்ணையை விரிவுபடுத்தினேன். கிணறு வெட்டி, நிலத்தைச் சரிபடுத்தினேன். அதோட, தார்பார்க்கர், சாஹிவால், சிந்தினு நாட்டு மாடுகளையும், பால் மதிப்புக் கூட்டல் இயந்திரங்களையும் வாங்கினேன். இப்போ மொத்தம் 22 மாடுகள் இருக்கு. பால் பண்ணை ஆரம்பிச்சு ஒரு வருஷம் முடியப் போகுது. இப்ப, தினமும் 150 லிட்டர்ல இருந்து
180 லிட்டர் வரை பால் கிடைக்குது.

இயற்கைப்பாலுக்கு கூடுதல் ருசி!

இயற்கை விவசாயத்தில் விளைந்த தீவனங்களை மட்டுமே சாப்பிடுற நாட்டு மாடுகளோட பால்ங்கிறதால, என் பண்ணை பால் நல்ல திக்கா, ருசியா இருக்கும். இந்த பாலுக்கு பிராண்ட் பெயர் பதிவு செஞ்சு, சிறுதொழிலுக்கான சான்றையும் வாங்கி பாக்கெட்ல அடைச்சு சென்னையில இருக்கிற பசுமை அங்காடிகளுக்குக் கொடுக்கிறேன். நல்ல வரவேற்பு இருக்கு. மீதமுள்ள பால்ல ஆர்டரைப் பொறுத்து பனீர், வெண்ணெய், நெய் தயாரிச்சு விற்பனை செய்றேன். அப்படியும் பால் மீதமானா தனியார் பண்ணைகளுக்கு ஊத்திடுவேன்” என்ற ஹரிபிரசாத், மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்புப் பற்றிச் சொன்னார்.

அட்சயப் பாத்திரம்!

“பால் பண்ணை வெக்கிறவங்க, பாலை மட்டும்தான் பணமா பாக்குறாங்க. அதனாலதான் சிலசமயங்கள்ல நஷ்டம் வந்துடுது. ஆனா, பசு ஒரு அட்சயப் பாத்திரம் மாதிரி. அது கொடுக்குற அத்தனையும் மதிப்புமிக்கது. அதை நான் சரியா புரிஞ்சுக்கிட்டதால எதையுமே வீணாக்கிறதில்லை. சாணம், சிறுநீரை விற்பனை செய்றேன். பஞ்சகவ்யா தயாரிச்சு விற்பனை செய்றேன். யாகத்துக்கான வறட்டி தயார் பண்ணி விற்பனை செய்றேன். தார்பார்க்கர் மாட்டுச்சாண வறட்டி யாகத்துக்கு நல்லதுங்கிறதால எப்பவும் ஆர்டர் இருந்துகிட்டே இருக்கு. ஒரு லிட்டர் சிறுநீரை எட்டு ரூபாய்னும், ஒரு வறட்டியை மூணு ரூபாய்னும் விற்பனை செய்றேன்.

‘இப்ப என்கிட்ட மொத்தம் 22 மாடுகள் இருக்கு. இதன் மூலமா மாசத்துக்கு சராசரியா 5 ஆயிரம் லிட்டர் பால் கிடைக்குது. இதுல, பசுமை அங்காடிக்கு லிட்டர் 55 ரூபாய் விலையில தினமும் 50 லிட்டர் கொடுக்கிறேன். மாசத்துக்கு 82 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்குது. நெய், பனீர், வெண்ணெய் விற்பனை மூலமா சராசரியா மாசத்துக்கு 75 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. தனியார் பண்ணைக்குக் கொடுக்கிற பால் மூலமா மாசத்துக்கு 34 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்குது. சிறுநீர், சாணம், பஞ்சகவ்யா, வறட்டி, கோழி  முட்டை, வாத்து முட்டை விற்பனை மூலமா மாசத்துக்கு சராசரியா 33 ஆயிரம் ரூபாய் வருது. ஆக மொத்தம் மாசம் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம். இதுல, 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவு போக, ஒரு லட்ச ரூபாய் லாபமா நிக்குது. அதுல, கடனுக்கான தவணைத் தொகையா மாசம் 80 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருக்கு. மீதி 20 ஆயிரம் ரூபாய் கையில நிக்குது. வங்கிக் கடனை அடைச்சப் பிறகு, மாசம் ஒரு லட்சம் சொளையா கைக்கு கிடைக்கும்’’ என்ற ஹரிபிரசாத், மாடுகளுக்கான நோய் மேலாண்மை பற்றியும் பேசினார்.

தீவனத்தோடு மருந்து!

“மாடுகளுக்கு கோமாரி, சப்பை நோய்னு சீசனுக்கு தகுந்தாப்புல நோய்கள் வரும். அந்தந்த சீசனுக்குத் தகுந்த மாதிரி நோய் வர்றதுக்கு முன்னாடியே தடுப்பூசி போட்டுட்டா நோய்த்தாக்குதலைத் தவிர்த்துடலாம். அதுபோக, மடிவீக்க நோய்தான் பெரும் பிரச்னை. அது எப்ப வரும்னே தெரியாது. அதுக்கு மருத்துவர்கள் ஆலோசனை கண்டிப்பா அவசியம். நாங்க பெரும்பாலும் கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி கிட்டத்தான் ஆலோசனை கேட்டுக்குவோம். அது போக, எங்க மாடுகளுக்கு… வாரத்துல ஒரு நாள் தீவனத்தோட வேப்பிலை; ஒரு நாளைக்கு பூண்டு; ஒரு நாளைக்கு மஞ்சள்னு கொடுத்துடுவோம். அதுனால பெருசா நோய் தொந்தரவு இல்லாம ஆரோக்கியமா இருக்கு.

பண்ணையில இருக்கிற வாத்துகள் மாட்டு ஈ, உண்ணிகளையெல்லாம் பிடிச்சு தின்னுடுது. அதனால பாதி பிரச்னை சரியாகிடுது. பொதுவா, மாடுகளை தினமும் குளிப்பாட்டணும். ஒவ்வொரு மாட்டையும் தனித்தனியா கவனமா பார்க்கணும். சில மாடுக தீவனம் எடுக்காம இருக்கும். சில மாடுக சோர்வா இருக்கும். அந்த மாடுகளுக்கு என்ன பிரச்னைனு பாத்து அதை சரி செய்யணும். ஆகமொத்தம் முறையா செய்தால் பால் பண்ணை நிச்சயமா லாபம் கொழிக்கும் தொழில்ங்கிறதுல சந்தேகமேயில்லை” என்று நம்பிக்கையூட்டும் விதமாகச் சொல்லி விடைகொடுத்தார் ஹரிபிரசாத்.

தொடர்புக்கு,

ஹரிபிரசாத்,

செல்போன்: 99406-69714.

வெண்ணெய்க்கு தார்பார்க்கர்!

வெண்ணெய் எடுக்க தார்பார்க்கர் மாட்டுப்பாலை மட்டுமே பயன்படுத்தும் ஹரிபிரசாத், ‘‘பழைய கால முறைப்படி பானையில வெச்சு கடைஞ்சி வெண்ணெய் எடுக்கிறேன். 25 லிட்டர் பாலுக்கு 5 கிலோ வெண்ணெய் கிடைக்கும். ஒரு கிலோ வெண்ணெய் 700 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. 5 கிலோவுக்கு 3,500 ரூபாய் கிடைக்கும். விசேஷ நாட்கள்ல வெண்ணெய் ஆர்டர் அதிகமாக வரும்’’ என்கிறார்.

பலே பனீர்!

மதிப்புக் கூட்டுப் பொருட்கள் செய்வதற்கு முறையாகப் பயிற்சி எடுத்திருக்கும் ஹரிபிரசாத், ‘‘பனீர் தயாரிக்க அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. பால்ல எலுமிச்சைச்சாறை விட்டா, கால் மணி நேரத்துல பால் புளிச்சுடும். 5 லிட்டர் பாலுக்கு, ஒரு எலுமிச்சைப் பழத்தைப் பிழிஞ்சு விடலாம். புளிச்சு கெட்டியான பாலை, வடிகட்டி பனீர் தயாரிக்கிற கருவியில போட்டு இடியாப்பம் பிழியிற மாதிரி பிழிஞ்சா, தண்ணியெல்லாம் சுத்தமா வடிஞ்சு கட்டியான பனீர் கிடைக்கும். அதை அப்படியே பாக்கெட் பண்ணிக் கொடுத்திடலாம். ஒரு கிலோ பனீர் தயாரிக்க 10 லிட்டர் பால் தேவை. ஒரு கிலோ பனீர் 400 ரூபாய்க்கு விற்பனையாகுது” என்கிறார்.

கைசெலவுக்கு முட்டை!

சில ரக கோழிகளையும் வளர்க்கிறார் ஹரிபிரசாத். அவற்றைப் பற்றி பேசும்போது, ‘‘எங்க பண்ணையில 150 நாட்டுக்கோழிகள் இருக்கு. கிரிராஜா, வனராஜா ரகக் கோழிகளைத்தான் வளர்க்கிறேன்.

இதுகளுக்காக தனியா கொட்டகை கிடையாது. அப்பப்ப தீவனம் கொடுக்கிறது, தடுப்பூசிகள் போடுறதோட சரி.

காலையில கிளம்பி தோட்டம் முழுக்க மேய்ஞ்சுட்டு, சாயங்கால நேரத்துல அதுகளா அடைஞ்சுக்கும். அடைக்கு வெக்கிறது போக மீதி முட்டைகளை மட்டும் விற்பனை செய்றோம். கோழிகளை விற்பதில்லை. அதேமாதிரி வாத்துகள் மூலமா கிடைக்கிற முட்டைகளை மட்டும்தான் விற்பனை செய்றேன். இந்த முட்டை வருமானம் கைசெலவுக்கு சரியா இருக்குது’’ என்று குஷியாகச் சொல்கிறார்.

துரை.நாகராஜன்

படங்கள்: எஸ்.சந்திரமௌலி

 

நன்றி விகடன்.

நான் அவனில்லை; அறிவாலயத்தை அலற வைத்த கருத்துக்கணிப்பு! – விகடன்

ரும் 2016- சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு தி.மு.க.வுக்கே என்றொரு தகவல் கருத்துக் கணிப்பு மூலம் தெரிவதாக வந்த தகவலால், பிற கட்சிகளை விட ஒரு படிமேலாக தி.மு.க. தலைமையே அதிக டென்ஷனுக்கு ஆளாகியிருக்கிறது என்கிறார்கள். சந்தோஷப்படவேண்டிய விஷயத்துக்கு ஏன் டென்ஷனாகிறார்கள் என்ற கேள்வியுடன் அறிவாலயத்தை வலம் வந்தோம்.

எந்த கல்லூரியும் இதுவரை  செய்ய முன்வராத ‘கருத்துக் கணிப்பு’ பணியை லயோலா கல்லூரி மட்டுமே செய்து வந்தது.  பல விஷயங்களை கருத்துக் கணிப்புக்காக லயோலா கையில் எடுத்தாலும், தேர்தல் கருத்துக் கணிப்பே பெரிய அளவில் பேசப்பட்டது. பிறவற்றிலான கருத்துக் கணிப்பு பிற்காலங்களில் விமர்சனத்துக்கு ஆளாகாமல் போனாலும் தேர்தல் கணிப்பு மட்டும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதாவது, கணிப்பு பொய்த்த போதெல்லாம்.

பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மாணவர் குழுக்களே அப்போதெல்லாம், இந்தக் கருத்துக் கணிப்பில் ஈடுபட்டு வந்தன. இப்போது மீண்டும் சிக்கலில் லயோலா தலையை சிலர் உருட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். ‘நாங்கள் செய்யாத ஒரு வேலையை யாரோ செய்து விட்டு, நாங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக கதை கட்டியிருக்கிறார்கள்’ என்றெல்லாம், ஒரிஜினல் கருத்துக் கணிப்புக்குழு தரப்பில் புலம்பல் கேட்க ஆரம்பித்திருக்கிறது.

இப்போது வெளியாகியுள்ள புதிய கருத்துக் கணிப்பு, முன்னாள் மாணவர்கள் குழு ‘பண்பாட்டு மக்கள் தொடர்பகம்’ என்ற பெயரில் வெளியிடப் பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுழன்று, 5176 பேரிடம் தாங்கள் கருத்துக் கணிப்பு நடத்தியதாக சொல்கிறது இந்த குழு.

கருத்துக் கணிப்பின் முடிவாக, 35.6% தி.மு.க.வுக்கும், 33.1% அ.தி.மு.க.வுக்கும் மக்கள் (செல்)வாக்கு இருப்பதாக சொல்லியுள்ளது. அதே கருத்துக் கணிப்பு முதல்வராகும் வாய்ப்பில் முதலிடம் கருணாநிதி, இரண்டாமிடம் ஸ்டாலின், மூன்றாமிடம் ஜெயலலிதா என்றும் சொல்லியிருக்கிறது.

இந்தக் கருத்துக் கணிப்பு ஓப்பன் பிரஸ்மீட் வரை போய் விட்டதோடு, இதை கணித்தவர்கள் லயோலாவின் முன்னாள் மாணவர்கள் என்றும் தகவல் ஓட, வழக்கமாக கணிப்பை வெளியிடும், ‘ரிசர்ச் அசோசியேட் பீப்புள் பவுண்டேசன்’ சார்பில், கார்த்திக் என்பவர் மீடியாக்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், “நாங்கள் அவர்களில்லை, இந்தக் கருத்துக் கணிப்பை செய்தது நாங்களல்ல” என்றிருக்கிறார்.

முதலில் வந்த கருத்துக் கணிப்பை விட, அந்தக் கணிப்பே தவறு அதைச் செய்தது நாங்களல்ல, என்ற இரண்டாவது தகவலே ‘அறிவாலயம்’ ஏரியாவை சூடாக்கி விட்டிருக்கிறதாம்.

சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்ட திமுக தலைமை, “இரண்டுவாரம் கூட ஆகலை, இப்படித்தான் ஒரு சூட்டை ஃபேஸ்-புக்கில் போட்டு விட்டுட்டீங்க… இப்போது மீண்டும் அதே மாதிரி ஒரு சூட்டை கிளப்பி இருக்கீங்க. உதவி செய்யலைன்னாக் கூட பரவாயில்லை ஃபாதர், சும்மா இருந்தா போதும்… நீங்க கட்சிக் காரர்னு எல்லோருக்குமே தெரியும். புரியுதா, புரியுதா என்று பலமுறை கோபமாகச் சொல்லி லைனை துண்டித்துவிட்டு சைலண்ட் ஆகி விட்டாராம் தலைவர்.

– ந.பா.சேதுராமன்