எனக்கு பிடித்த விமரிசனம் & கட்டுரை

விகடனில் கலைஞருக்கு எதிராக கட்டுரை – அதிசயம் – ஆனால் உண்மை …!!! – விமரிசனம் – காவிரிமைந்தன்

விகடன் செய்திகள் தளத்தில் இந்த கட்டுரையைப் படித்து
விட்டு பலமுறை என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.

கலைஞர் கருணாநிதியின் தலைமையில்
திமுக சார்பில் நேற்று சென்னையில் ஒரு “பிரம்மாண்ட”
பேரணி நடத்தப்பட்டது.

பேரணிக்கான காரணம் – கோரிக்கை –
செம்பரம்பாக்கம் ஏரியை கால தாமதமாக திறந்து
சென்னையை வெள்ளக்காடாக்கியதைக் குறித்து
விசாரிக்க உடனடியாக உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு
“நீதி விசாரணை” நடத்தப்பட வேண்டும்…!!!

கலைஞர் பேரணி நடத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் – மதியம் 12 மணிக்கு – அதற்கு நேரெதிராக
” செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதில் எந்த வித தவறும்
நிகழவில்லை ” என்று ஆதாரபூர்வமாக, விவரமாக விளக்கும்
ஒரு கட்டுரையை விகடன் செய்திதளம் வெளியிடட்டுள்ளது.

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு, அதிமுக அரசுக்கு
மிகவும் உதவியாக இருக்கக்கூடிய ஒரு கட்டுரையை
விகடன் வெளியிட்டிருப்பது – அதன் பின்னணியைப் பற்றி
பலமாக யோசிக்கத் தூண்டுகிறது. இதன் பின்னால்
நிச்சயமாக ஒரு காரணம், ஒரு உள்நோக்கம் இருந்தேயாக
வேண்டும்.

அது என்னவாக இருக்க முடியும் …?

விகடன் – திமுகவின் சொந்தப் பத்திரிகை என்கிற விஷயம்
வெளியில் பரவலாகப் பரவி விட்டதால்,

– மக்கள் மத்தியில் அதன் நம்பகத்தன்மை
முற்றிலுமாகப் போய் விட்டது என்கிற பேச்சிலிருந்து
வெளியே வர முயற்சியா …?

– அல்லது சரிந்து விட்ட சர்குலேஷனை மீட்கும் முயற்சியா …?

– அல்லது தேர்தல் சமயத்தில் அனைத்து தரப்பினரும்
படிக்கின்ற மாதிரி ஒரு இமேஜை தனது நிறுவனத்திற்கு
வைத்துக் கொண்டால் தான் –
தாங்கள் சொல்வது அனைவரையும் reach ஆகும்.
இல்லையேல் வெறும் முரசொலி மாதிரி திமுக வினர் மட்டுமே
படிக்கும் பத்திரிகையாகி விடும் என்கிற காரணமா …?

இனி நேரே கட்டுரைக்கு போவோமே …!!!

 

சென்னையின் ‘தாய்மடி’ செம்பரம்பாக்கம் ஏரி. தலைநகரின் தண்ணீர் தாகத்தில், 40 சதவீதத்தை தணிப்பது செம்பரம்பாக்கம்தான். சென்னைவாசிகளால் பாசத்தோடு பார்க்கப்பட்ட இந்த ஏரி, சென்னையை மூழ்கடித்த மழை வெள்ளத்திற்குப் பிறகு, சற்று பயத்தோடு பார்க்கப்படுகிறது.

சென்னை மூழ்குவதற்கு, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தாமதமாக தண்ணீரைத் திறந்துவிட்டதே என்ற புதிய காரணம் கண்டுபிடிக்கப்பட்டதால்தான் அந்த பயம்.  செய்தி வெளியானதும் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், அதை அப்படியே பேட்டியாகத் தட்டிவிட்டார். தி.மு.க தலைவர் கருணாநிதி, காரணங்களை அடுக்கி கண்டன அறிக்கை வெளியிட்டார். மழையிலும் வெள்ளத்திலும் ஊறிப்போய் கிடந்த சென்னையில், செம்பரம்பாக்கம் பரபரவென பற்றிக் கொண்டது.

கொழுந்துவிட்டெரிந்த செம்பரம்பாக்கத்தின் அனல், அ.தி.மு.க பொதுக்குழுவிலும் அடித்தது.
அதில் பேசிய  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, “செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட காலதாமதம் ஏற்பட்டதுதான் சென்னை வெள்ளத்தில் மூழ்கக் காரணம் என்று எதிர்க்கட்சிகள் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றன. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விளக்கமாக அறிக்கை கொடுத்த பின்னரும், மீண்டும் மீண்டும் ஒரே பொய்யை  திரும்பத் திரும்ப எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. மழைக் காலங்களில் ஏரிகளில் நீர் அளவு எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் என்பது பற்றி ‘வெள்ளநீர் ஒழுங்கு விதிமுறைகள்’ என்பதில் மிகத்தெளிவாக உள்ளது. இது நன்றாகத் தெரிந்தும், வேண்டுமென்றே தி.மு.க.வினர் பொய்ப் பிரசாரம் செய்கின்றனர். இதுபற்றி எதிர்க்கட்சியினருக்கு புரியவில்லை என்றால் 8-ம் வகுப்பு கணிதப் பாடத்தில் உள்ள ‘காலம் மற்றும் வேலை’ பற்றிய கணக்குகளைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்” என்று கொந்தளித்தார்.

இவ்வளவு விவகாரம் கிளப்பிய விஷயத்தில்  உண்மையில் நடந்தது என்ன?

பொதுப்பணித்துறையின் நீர் மேலாண்மைப் பிரிவின் சிறப்புப் பொறியாளர் (ஓய்வு) வீரப்பன்,  செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு விவகாரத்தில் இதுதான் நடந்தது என்று சொல்லும் தகவல்கள் இங்கு அப்படியே…
டிசம்பர் 1, 2 தேதிகளில் என்னதான் நடந்தது?

பொறியாளர் வீரப்பனைப் பொறுத்தவரை,  செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு சரியான சமயத்தில்,  தெளிவான திட்டமிடலுடன்தான் திறக்கப்பட்டது என்கிறார். எந்த வீண் தாமதமும், அலட்சியமும் இல்லை என்று அவர் சொல்கிறார். இதற்கான ஆதாரங்களாக அவர் முன்வைக்கும் வாதங்கள் பின் வருமாறு…

1- செம்பரம்பாக்கத்தில் திறக்கப்பட்டது 29 ஆயிரம் கன அடி மட்டுமே..!

டிசம்பர் 2-ம் தேதி சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலம் மூழ்கியபோது, அந்த இடத்தைக் கடந்த தண்ணீரின் அளவு, 55 முதல் 60 ஆயிரம் கன அடி. இது அத்தனையும் செம்பரம்பாக்கத்தில் இருந்து திறந்துவிடப்பட்டதல்ல. செம்பரம்பாக்கத்தின் மொத்தக் கொள்ளளவே 33 ஆயிரம் கன அடிதான். உபரி நீரை வெளியேற்ற அங்குள்ள நீர் வெளியேற்றும் வழிகள் மொத்தம் 24. அவை அனைத்தையும் திறந்துவிட்டாலும்கூட 29 ஆயிரம் கன அடி நீர்தான் வெளியேறும். அதனால், அங்கிருந்து 55 ஆயிரம் கன அடி தண்ணீரோ,  60 ஆயிரம் கன அடி தண்ணீரோ திறந்துவிடப்படவில்லை.
2- முதல்நாளே ஏன் திறக்கவில்லை?
‘டிசம்பர் 2-ம் தேதி மொத்தமாக 29 ஆயிரம் கன அடி தண்ணீரை ஏன் திறக்க வேண்டும்? அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே கொஞ்சம் கொஞ்சமாக திறந்துவிட்டு இருக்கலாமே…?’ என்பது சிலரின் கேள்வி.

டிசம்பர் 1-ம் தேதி வரை செம்பரம்பாக்கத்திற்கு வந்த நீர்வரத்து வெறும் விநாடிக்கு 960 கன அடி தண்ணீர். அதில் பொதுப்பணித்துறைப் பணியாளர்கள், 900 கன அடி தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளனர். 60 கன அடி தண்ணீரை சேமித்துள்ளனர். இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.

 

ஒன்றாம் தேதி இரவுக்கு முன்புவரை சென்னையிலும்,  அதனைச் சுற்றி உள்ள பகுதியிலும் பெய்த மழையின் அளவு வெறும் 50 மி.மீ .தான். ஆனால், ஒன்றாம் தேதி இரவிலும் அதற்குப் பிறகும்,  மழை பேய்த்தனமாக பெய்யத் தொடங்கியது. 50 மி.மீ  பெய்து கொண்டிருந்த மழையின் அளவு,  கிடுகிடுவென அதிகரித்து 400 மி.மீ க்கு உயர்ந்தது. அதனால், இரண்டாம் தேதி, அணைக்குச் சட்டென விநாடிக்கு, 26 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத் தொடங்கியது. இது ஆபத்து என்று உணர்ந்த பொதுப்பணியாளர்கள்,  அணையிலிருந்து 29 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டனர். இதில் எந்தத் தவறும் இல்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், ஒன்றாம் தேதி வரை வெறும் 960 கன அடி தண்ணீர்தான் அணைக்கு வந்தபோது, அதில் சரியாக 900 கன அடி  தண்ணீரை பொதுப்பணியாளர்கள் திறந்துவிட்டுள்ளனர்.

ஒன்றாம் தேதி இரவுக்குப் பிறகு சட்டென 26 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து உயர்ந்துள்ளது. அதனால், அதில் 29 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர். 29 ஆயிரம் கன அடி தண்ணீர் வரும் என்பது எதிர்பார்க்காத ஒன்று. ஏனென்றால், கன மழை பெய்யும் என்றுதான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததே தவிர, 400 மி.மீ  அளவிற்கு அது பெய்யும் என்பது வானிலை ஆய்வு மையம் உள்பட எத்தரப்பும் எதிர்பார்க்காதது. அதுபோல், நாம் நினைப்பதுபோல் முதல் நாளே திறந்துவிட்டிருந்தால், 960 கன அடித் தண்ணீரையும் திறந்துவிட்டிருக்க வேண்டும். அப்படியெல்லாம் செய்ய முடியாது. ஏனென்றால், 1-ம் தேதி இரவுக்குமேல் பெய்த மழையைப்போல் ஒரு ராட்சத மழை பெய்யவில்லை என்றால், மொத்தத் தண்ணீரையும் கடலுக்கு அனுப்பிவிட்டு அணையை காயப்போட்டு வைக்க முடியாது. பிறகு மழை பெய்தும் சென்னையில் தண்ணீர் பஞ்சம் இருக்கும். அப்போது, தண்ணீரை ஒழுங்காகச் சேமித்து வைக்கவில்லை என்று அனைத்து தரப்பிலிருந்தும் விமர்சனம் கிளம்பும்!

தேதி அணையின் கொள்ளளவு(TMC) ஒரு விநாடிக்கு ஏரிக்கு வந்த நீர் கனஅடியில் ஒரு விநாடியில் ஏரியிலிருந்து வெளியேறிய நீரின் அளவு கனஅடியில்
01.12.2015 3.141 960 900
02.12.2015 3.396 26,000 29,000
03.12.2015 3.094 10,200 11,000
04.12.2015 3.132 4,900 5,000

3 – முதல்வர் ஜெயலலிதா உத்தரவுக்காக காத்திருந்தனரா?

பொதுப்பணித்துறைப் பணியாளர்களைப் பொறுத்தவரை அவர்கள் யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கத் தேவையில்லை. வெள்ளம், பெருமழைக் காலம் போன்ற நேரங்களில், அவர்களுக்கு யாருடைய உத்தரவும் தேவையில்லை. தங்களுடைய பொறுப்பில் இருக்கும் ஏரிக்குப் பின்புறம் உள்ள பகுதியைப் பற்றியோ, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிக்கு முன்புறம் என்ன நடக்கிறது என்பதைப் பற்றியோ அவர்கள் கருத்தில் கொள்ளமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து, அதில் சேமிக்க வேண்டிய நீரை சேமித்துக் கொண்டு மற்றவற்றை திறந்துவிடுவார்கள். ஒன்றாம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு,  29 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத் தொடங்கியதும்,  அவர்கள் யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கவில்லை. உடனடியாகத் திறந்துவிட்டனர். அவர்கள் யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்கவும் தேவையில்லை. ஏனென்றால், அவர்களுக்கு அந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது!

4 – பாசனத்திற்குத் திறப்பது வேறு… வெள்ளச் சமயங்களில் திறப்பது வேறு!

அணையில் சேமிக்கப்பட்டுள்ள தண்ணீரை பாசனத்திற்காக திறக்கும்போது, தலைமைச் செயலாளர், முதலமைச்சரிடம் அனுமதி கேட்பது நடைமுறை. ஏனென்றால், அது குடி நீர் தேவைக்கும் அல்லது எதிர்காலத்தில் தகுந்த விவசாய காலத்திற்கும் ஏற்றவகையில் அவற்றைப் பயன்படுத்தலாமா… அல்லது இப்போது திறந்துவிடலாமா? என்று அனுமதி கேட்பார்கள். ஆனால், மழை வெள்ளம் போன்ற பேரிடர் சமயங்களில் இதுபோன்ற நடைமுறைகளுக்காக காத்திருக்கமாட்டார்கள். கோப்புகள் கையெழுத்தாகி வரும் வரையில் பொறுத்திருக்கத் தேவையும் இல்லை. அதை அந்தந்தப் பகுதிக்கு பொறுப்பான பொதுப்பணித்துறை பொறியாளர்களே முடிவெடுத்துக் கொள்ளலாம். அதுபோல்தான் இப்போதும் நடந்தது. அதனால், தலைமைச் செயலாளர் உத்தரவுக்காகக் காத்திருந்தனர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தவுக்காக காத்திருந்தனர் என்றெல்லாம் சொல்லப்படுவது முகாந்திரமற்றக் குற்றச்சாட்டுக்கள்.

5- நீர் அளவு 29 ஆயிரம் கன அடி எப்படி 60 ஆயிரமானது?

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர்தான் அடையாறாக சென்னைக்கு வருகிறது. அப்படி அது வரும் வழியில் 278 ஏரிகளும், நீர்நிலைகளும் உள்ளன. அந்தத்  தண்ணீரையும் அது உள்வாங்கிக் கொண்டு வருகிறது. மேலும், அன்று முழுவதும் விடாமல் கொட்டிக் கொண்டிருந்த மழையும் அதோடு சேர்ந்து கொண்டது. அந்தத் தண்ணீரெல்லாம் செம்பரம்பாக்கத்தோடு சேர்ந்துதான் 60 ஆயிரம் கன அடி தண்ணீரானது..

6 – 2005ம் ஆண்டு ஏற்படாத சேதம் இப்போது ஏன்?

சைதாப்பேட்டை பாலத்திற்கடியில் தண்ணீர் கடப்பதற்கு மொத்தம் 12 வழிகள் இருந்தன. ஆனால், அவற்றில் 7 அடைக்கப்பட்டுவிட்டது. எல்லாம் ஆக்கிரமிப்புகள். 2005-ம் ஆண்டு 60 ஆயிரம் கன அடித் தண்ணீர் ஓடியபோது, 12 வழிகளும் இருந்தன. ஆனால், இப்போது அவை இல்லையே. பிறகு எப்படித் தண்ணீர் வெளியேறும்? ஆக்ரோஷமாக வரும் வெள்ளம் ஊரைத்தான் காவு வாங்கும்!

7 – சிதைக்கப்பட்ட அடையாற்றின் கரைகள்!

ஒரு ஆறு என்பது தன்னளவில் அகன்று கொண்டே வர வேண்டும். ஆனால், செம்பரம்பாக்கத்தில் இருந்து தண்ணீரைப் பெற்றுக் கொண்டு வரும் அடையாற்றின் கரைகள் எந்தளவிற்கு சிதைக்கப்பட்டு இருக்கிறது என்பதை பார்த்தால், சென்னை வெள்ளத்தில் மூழ்கியதற்கான காரணத்தையும் உணர முடியும்.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் கடலில் கடக்கும் பாதை
அடையாறு மந்தநந்தபுரத்தில்,  105 மீட்டராகவும் ஆழம் 9 மீட்டராகவும் இருந்து,  ஏர்போர்ட் வரும்போது 222 மீட்டர் அகலமாகவும், ஆழம் வெறும்  6 மீட்டராகவும் குறுகிறது. மணப்பாக்கத்தில் அதுவும் குறுகி, அகலம் 112 மீட்டராகவும் ஆழம் 5 மீட்டராகவும் மாறுகிறது. பிறகு, மீண்டும் நந்தம்பாக்கத்தில் ஆற்றின் அகலம் 59 மீட்டராகக் குறுகி, ஆழம்  9 மீட்டராகிவிடுகிறது. சைதாப்பேட்டையில் ஆற்றின் அகலம் 83 மீட்டராகவும், ஆழம் 4 மீட்டராகவும் சிறுத்துவிடுகிறது. அடையாறு பாலத்தின் அருகில்  222 மீட்டர் அகலம் வெகுவாகச்  சுருங்கிப் போய்விடுகிறது.

ஆற்றின் பரப்புக்கு மட்டுமல்ல, ஆற்றின் கரைகளுக்கும் இதுதான் நிலை. ஒருபக்கம் உயர்ந்தும், ஒரு பக்கம் அரிக்கப்பட்டும் கிடக்கிறது. இப்படி இருக்கும்போது, பரந்து வரும் வெள்ளத்தின் வேகம், தன் பாதையில் தடை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புகளை அடித்து நொறுக்கிக் கொண்டு போகிறது. இதுபோதாதென்று அடையாற்றின் கரைகளைச் சிதைத்து வைத்துள்ளனர். அதனால்தான், கரையை நாம் பலவீனப்படுத்தி வைத்த இடங்களில், ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. ஆற்றின் ஆழத்தை கட்டுமானக் கழிவுகளால் நிரப்பிய இடங்களில், அது பொங்கி  தெருத் தெருவாக ஓடியது.

அடையாறு ஆற்றுப்படுகையின் ஆக்கிரமிப்புகளை சுட்டிக் காட்டும் வரைபடம்

கடல் நோக்கி செல்லச் செல்ல ஆக்கிரமிப்புகளால் குறுகும் அடையாற்றின் பரப்பளவு!

(பொதுவாக ஆற்றின் இருபக்க கரைகளும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், தாழ்வான கரையில் வெள்ளம் ஏறும். ஆனால், அடையாற்றின் கரைகள் ஏற்றத்தாழ்வுடன் இருப்பதையும் கடைசி அட்டவணை  உணர்த்துகிறது!)

செம்பரம்பாக்கத்தில் இருந்து தொலைவு இடத்தின் பெயர் ஆற்றின் பரப்பு ஆற்றின் ஆழம் கரைகளின் உயரம் (இடது -வலது)
8.40 கி.மீ உள்வட்டச்சாலை 116 மீட்டர் 11 மீ 10 மீ -13மீ
13.40 கி.மீ விமானநிலையம் 222 மீட்டர் 6 மீ 8மீ-7மீ
18.40கி.மீ நந்தம்பாக்கம் 59 மீட்டர் 9 மீ 7 மீ-6மீ
23.40கி.மீ சைதாப்பேட்டை 83.3 மீட்டர் 4 மீ 5 மீ -9 மீ
28.80 கி.மீ திரு.வி.க பாலம் 485 மீட்டர் 1 மீ 4 மீ – 5 மீ

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, தாமதமாக தண்ணீர் திறந்துவிட்டதுதான் சென்னை மூழ்கியதற்கு காரணம் என்று சொல்வது சுத்தப் பொய். அதனால், சென்னை மூழ்கவில்லை. தண்ணீரும் அங்கிருந்து தாமதமாகத் திறந்துவிடப்படவில்லை. சரியான நேரத்தில், சரியான அளவில் தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. டிசம்பர் முதல்நாள் வரை ஏரிக்கு தண்ணீர் வரத்து 960 கன அடிதான் இருந்தது. அப்போது 900 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இது சரியான அளவு. ஆனால், 2-ம் தேதி அப்போது பெய்த கனமழையால் தண்ணீரின் வருகை அளவு திடீரென 29 ஆயிரம் கன அடியாகக் கூடியது. அப்போது 26 ஆயிரம் கன அடி தண்ணீரை  திறந்துவிட்டுள்ளனர் பொதுப்பணித்துறைப் பணியாளர்கள். அவர்களுடைய வேலை, ஏரிக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது. எந்த நேரத்தில் அதைத் திறந்துவிட வேண்டும். எவ்வளவு திறந்துவிட வேண்டும் என்பதை கணக்கிட்டு செயல்படுவதுதான்.

ஏரிக்கு அப்பால் நடக்கப்போவதையோ, ஏரிக்கு முன்னால் நடப்பதையோ பற்றி அவர்களுக்கு கவலையில்லை. அது அவர்களுடைய வேலையும் இல்லை. தண்ணீர் வரும் பாதையை சரியாக பராமரிக்காமல், சைதாப்பேட்டை பாலத்தில் உள்ள நீர் வெளியேறும் வழிகளை அடைத்து வைத்தால் அதற்கு அவர்களா பொறுப்பு? அதுபோல அடையாற்றின் கரைகளைச் சிதைத்து வைத்துள்ளனர். ஆற்றுக்குள் கட்டுமானக் கழிவுகளை கொட்டி வைத்துள்ளனர். இதுபோன்ற காரணங்களால்தான் அடையாற்றில் வந்த வெள்ளம் ஊருக்குள் புகுந்து சென்னையை மூழ்கடித்தது.

-ஜோ. ஸ்டாலின் 

படங்கள்: எம். உசேன், ப.சரவணக்குமார், தி. குமரகுருபரன்
நன்றி விமரிசனம் – காவிரிமைந்தன்
நன்றி விகடன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s