அந்த மனிதரின் கையிலிருந்த சூட்கேஸின் மீது, ‘நான் வெளிநாட்டில் ஆடு மேய்த்தவன்’ என்று எழுதப்பட்டு, கீழே அவரது செல்பேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. அரேபிய ஷேக் பாணியில் நீண்ட பைஜாமா, குர்தா உடை. திருவான்மியூரிலிருந்து கோயம்பேடு செல்லும் பேருந்தில் ஏறினார். ஏறியவர், உடனே பயணிகளைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்.
இங்குள்ள ஏஜெண்டுகள் கூறும் பொய்யான தகவல்களை நம்பி வெளிநாடுகளுக்குப் போகாதீர்கள். இங்கு அவர்கள் சொல்லும் வேலை ஒன்று, கொடுக்கும் வேலை வேறு. சம்பளமும் சரிவரத் தருவதில்லை. வெளிநாட்டுக்குப் போய் கொத்தடிமை வாழ்க்கை வாழ்வது தேவைதானா? சிந்திப்பீர்…” என்று பயணிகளுக்குத் துண்டு நோட்டீஸ் கொடுத்தபடி பிரசாரம் செயத் தொடங்கினார்.
யார் இவர்?
பெயர் சேரன். சொந்த ஊர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி. பி.ஏ. தமிழிலக்கியம் படித்தவர். கல்லூரிப் படிப்பு முடிந்து, டெய்லரிங் தொழிலில் ஈடுபட்டார். நல்ல வருமானம். பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை இனிமையாகத்தான் போய்க்கொண்டிருந்தது – 1995-ஆம் ஆண்டு வரை.
சுற்றியிருந்தவர்கள் அவரை உசுப்பேற்றினர். ‘டெய்லரிங் தொழிலுக்கு வெளிநாட்டில் நல்ல வரவேற்பு இருக்கு. ரெண்டே வருஷத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிச்சுடலாம்…’ என்று தூபம் போட்டார்கள். சேரனும் அதற்கு மயங்கினார். ஏஜெண்ட்டைத் தொடர்பு கொண்டபோது, எண்பதாயிரம் ரூபாய் ஆகும் என்றார். அந்தப் பணத்தைக் கடன் வாங்கிக் கொடுத்தார் சேரன். சில மாதங்களில் டெய்லரிங் விசா ரெடி என்றார் ஏஜெண்ட்.
மும்பையில் விமானம் ஏறிய சேரன், ரியாத் நகரில் இறக்கப்பட்டார். அங்கிருந்து நூற்றைம்பது கி.மீட்டர் தொலைவிலுள்ள காடும் மலையும் நிறைந்த ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ஏராளமான தகரக் கூடாரங்கள். மின்சார வசதி இல்லாத பகுதி அது. அங்கிருந்த முதலாளியிடம் அவரைக் கொண்டு சென்று நிறுத்தினார்கள். அந்த முதலாளி, டிரைவரிடம் ஏதோ சொல்ல, அவர் மொழி பெயர்த்துக் கூறிய வார்த்தைகளைக் கேட்டு சேரனுக்குத் தலையில் இடி இறங்கியது போலானது.
அந்த வார்த்தைகள்: ‘உனக்கு இங்கு ஆடு மேய்க்கிற வேலை. மாசம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். அந்தச் சம்பளமும் ஆறு மாதத்துக்குப் பிறகு தான்.’ இனி சேரனே கூறுகிறார்:
எனக்கு டெய்லர் வேலை. பத்தாயிரம் ரூபாய் சம்பளம் என்றுதானே ஊரில் ஏஜெண்ட் சொன்னார்…’ என்றேன். ஆனால், ‘மூன்றாண்டு ஆடு மேய்க்கத்தான் உன்னை ஒப்பந்தம் பண்ணியிருக்கோம். அதுவரை நீ எங்கேயும் போக முடியாது. இங்கிருந்து தப்பியோட முயன்றால், விளைவு கடுமையாக இருக்கும்…’ என்று அந்த முதலாளி அரபியில் மிரட்டினார். என் பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள். அங்கிருந்த ஒரு தகரக் கொட்டகையில் தங்க வைக்கப்பட்டேன்.
இரவு பயண அசதியில் தூங்கிவிட்டேன். காலையில் அங்கு வந்த முதலாளி, உதைத்து எழுப்பினார். அறுபது ஆடுகளைக் கொடுத்து, மேய்த்துவிட்டு வரச் சொன்னார். காலை எட்டு மணிக்கு கொளுத்தும் வெயிலில், வாய் பேச முடியாத ஆடுகளோடு ஆடாக நானும் கிளம்பினேன். மாலை ஏழு மணிக்கு களைப்போடு திரும்பினேன். என்னைப் போலவே இன்னும் பல தமிழர்கள் அங்கு ஆடு மேய்ப்பதைக் கண்டேன்.
ஆறு மாதம்வரை அரை வயிறு உணவு மட்டுமே. சம்பளம் இல்லை. ஆறு மாதம் முடிந்ததும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் தந்தார்கள். அது என் சாப்பாட்டுக்கே செலவானது. இப்படியாக அடி, உதை, அவஸ்தைகளோடு பல தூங்காத இரவுகளுடன் மூன்றாண்டுகளைப் பல்லைக் கடித்துக்கொண்டு சகித்துக் கொண்டேன். மூன்றாண்டுகள் முடிந்த பிறகு தமிழகம் திரும்பினேன். இங்கு வந்ததும் அவமான உணர்வு அரித்தெடுத்துக் கொண்டே இருந்தது. கோபம் அதிகமானது. விளைவு, இயலாமையில் குடிக்க ஆரம்பித்தேன்.
நாட்கள் இப்படியே ஓட, ஒருநாள் எனக்குள் தெளிவு பிறந்தது. ‘எதுக்கு குடிக்கணும்? இதனால், நமக்கும் நம் குடும்பத்துக்கும்தானே கேடு. அதற்கு மாறா, வெளிநாட்டு மோகத்துடன் இருக்கும் நம்மவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே என்று நினைத்தேன். உடனே சில மாதக் குடிப்பழக்கத்தை உதறினேன்.
அதன்பிறகுதான் சூட்கேசில், ‘வெளிநாட்டில் ஆடு மேய்த்தவன்’ என எழுதி, வலம் வந்தேன். பலர்,இதுகுறித்துக் கேட்டார்கள். வெளிநாடு செல்வதில் உள்ள பிரச்சினைகளைச் சொன்னேன். 1998-லேயே இந்தப் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டேன்.
இப்பவும் மாதத்துக்கு பதினைந்து நாள் சென்னை மெரினா பீச், கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட், விமான நிலையம் ஆகிய இடங்களுக்கு இதே சூட்கேஸோடு போகிறேன். விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துண்டு நோட்டீஸ் கொடுக்கிறேன். கிராமங்களுக்குச் செல்லும் பஸ்களிலும் ஏறி என் பிரசாரத்தைத் தொடர்கிறேன். தனிமனிதனாக ஆரம்பித்த இந்தப் பிரசாரம் மூன்றாண்டுகளுக்கு முன், ‘மீட்பு அறக்கட்டளை’ என்ற அமைப்பாக மாறியிருக்கிறது. இந்த அமைப்பில், வெளிநாடு போய் நொந்து வந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இதன் தலைவராக நான் இருக்கிறேன்.
வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்கள் குறித்து தகவல் வந்தவுடன் களத்தில் இறங்கி விடுவோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை ஓய மாட்டோம்…” என்கிறார் சேரன்.
இங்கு வெளியாகியிருப்பது ஒரு சேரனின் கதைதான். வெளிவராத சேரன்களின் கண்ணீர்க் கதைகள் ஏராளம். இத்தனை சிரமங்களையும் தாண்டி இவர்கள் ஆண்டொன்றுக்கு இந்தியாவுக்கு அனுப்பும் தொகை எவ்வளவு தெரியுமா? இதில் முதலாவதாக வருவது கேரள மாநிலம். 42,922 கோடி ரூபாயை, கேரளாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த மாநிலத்திற்கு அனுப்புகிறார்கள்.
அதற்கடுத்து தமிழகம். 41,400 கோடி ரூபாயை வெளிநாடு வாழ் தமிழர்கள் இங்கு அனுப்புகிறார்கள். மூன்றாவது இடம் பெறுவது ஆந்திரம். இவர்கள் அனுப்பும் தொகை 28,550 கோடி ரூபாய்.
இந்நிலையில் தற்போது சவூதி அரேபியா, குவைத் போன்ற வளைகுடா நாடுகளில் புதுப் பிரச்சினை வெடித்துள்ளது. இந்த தேசங்கள், தங்கள் நாடுகளில் தங்கியுள்ள வெளிநாட்டினரை அதிரடியாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. என்னதான் நடக்கிறது அங்கே?
சவூதி:
‘கெட் அவுட் இந்தியன்… கெட் அவுட்!’
வளைகுடா நாடுகளில் மிகப் பெரிய நாடான சவூதி அரேபியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட மொத்தம் 90 லட்சம் வெளிநாட்டினர் பணிபுரிகின்றனர். இவர்களில், தமிழர்களின் எண்ணிக்கை மட்டும் 3 லட்சத்திற்கும் அதிகம். இந்நிலையில், இங்கு உள்நாட்டினருக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. 25 லட்சம் படித்த அரேபிய இளைஞர்கள் வேலையின்றித் தவித்தனர்.
சவூதியர்கள் வேலை வாய்ப்பின்மை குறித்து, அங்கிருந்த அமைப்புகள் அரசுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கின. அரசுக்கு எதிர்ப்பு வலுத்தது. மக்கள், வீதிகளில் இறங்கிப் போராடினர். எகிப்தைப் போலவே அங்கும் மக்கள் புரட்சி தோன்றுமோ என்று சவூதி அரசு அஞ்சியது. இதற்குத் தீர்வு காண, நிதாகத் என்ற சட்டத்தை சவூதி அரசு பிறப்பித்தது.
அந்தச் சட்டத்தின்படி, சவூதி அரேபியாவில் 10 பேருக்கும் அதிகமானவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களில், குறைந்தபட்சம் 10 சதவிகிதப் பணியிடங்கள் சவூதி அரேபியர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், அரேபிய நிறுவனங்கள் அதனை முறைப்படி பின்பற்றவில்லை. காரணம், குறைந்த சம்பளம். கூடுதல் வேலை. இவற்றை வெளிநாட்டுக் காரர்களிடம் வலியுறுத்த முடியும். உள்ளூர் ஆட்களை ஏய்க்க முடியாது. கசக்கிப்பிழிய முடியாது. இதனால், அரசு நேரடியாக ஒவ்வொரு நிறுவனங்களுக்குள்ளும் நுழைந்து, பணியாட்களைக் கணக்கெடுக்கத் தொடங்கியது. இந்த ஆய்வுகளில் சுமார் இரண்டரை லட்சம் நிறுவனங்களில் சவூதி அரேபியர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு வழங்கப்படாததைக் கண்டறிந்த அரசு, அந்த நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டவர்களின் பணி உரிமங்களைப் புதுப்பிக்க முடியாது என்று அறிவித்தது. அவ்வாறு பணி உரிமங்கள் முடிவடைந்த அனைவரும் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும்; இல்லாவிட்டால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படுவர் என எச்சரித்து நெருக்கடி கொடுத்தது.
இப்போதைய சவூதி நிலவரம் குறித்து அங்கு பணிபுரியும் அ.வெற்றிவேல் கூறுகிறார்: பொதுவாக ஒரு தரமான கம்பெனி மூலம் முறைப்படி விசா பெற்று வருபவர்களுக்கு இங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இப்போதைய பிரச்சினை, அரசு அனுமதியில்லாமல் லேபர் மற்றும் கார்பெண்டர், ஃபிட்டர் போன்ற விசா மூலம் இங்கு வந்து தனது குவாலிஃபிகேஷன்களுக்கு ஏற்ற வேறு நல்ல பணிகளில் இருப்பவர்களுக்குத்தான். இதற்கு முன் இருந்த சட்டம்தான் இது. இப்போது, அதனைக் கடுமையாய் கண்காணிக்கிறார்கள். நடவடிக்கை எடுக்கிறார்கள். சட்டத்துக்குப் புறம்பாய் பணி அனுமதியின்றி வேலை செய்பவர்களைக் கைது செய்து வெளியேற்றும் முயற்சியில் தீவிரம் காட்டுகிறார்கள்.
கடந்த ஏப்ரல் மாதமே முறையான ஆவணமின்றி தங்கி இருக்கும் பல வெளிநாட்டுக்காரர்களை இங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் சவூதி அரசு இறங்கியது. ஒவ்வொரு கம்பெனியாக நுழைந்து, அந்த கம்பெனி விசாவில் இல்லாதவர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி மற்றும் சல்மான் குர்ஷித் போன்றவர்கள் சவூதி வந்து, இங்குள்ள அரசுடன் நேரடிப் பேச்சு வார்த்தை நடத்தி, கால அவகாசம் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஜூலை 3-ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது அரசு. அவகாசம் மட்டுமல்ல, பாதிப்பிலிருக்கும் வெளிநாட்டவர் தங்கள் நிலைகளைச் சரிசெய்துகொள்ள பல சலுகைகளும் கொடுத்துள்ளது. சிலவற்றைக் கட்டணமின்றி செய்து கொள்ளலாம். சிலவற்றிற்கான செலவை நிறுவனம்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைய நிலையில், ஜெத்தாவிலிருந்து 19 ஆயிரம் பேரை வெளியேற்ற அரசு பட்டியலிட்டுத் தயாராக இருக்கிறது. இன்னும் இரண்டு வார காலங்களில் இதன் தொகை அதிகரிக்கும். இது சவூதியில் உள்ள ஜெத்தாவில் மட்டுமே. மற்ற முக்கிய நகரங்களான ரியாத், தமாம் போன்ற ஊர்களில் எவ்வளவு என்று கணக்கு தெரியவில்லை.
இதில் பணியாட்களை விட நிறுவனங்கள்தான் அதிக அபராதத் தொகை கட்ட நேரிடும். இதனால், சட்டப்படி தங்கள் நிலைமையைச் சரிசெய்வதில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. இது எல்லாமே சட்டப்படியான விஷயங்கள்தான். சட்டப்படி தங்கியிருப்பவர்களுக்கு இங்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்பதே உண்மை.” என்கிறார். வெற்றிவேல்.
குவைத் :
‘இம் என்றால் சிறை வாசம்… ஏன் என்றால் சுயதேசம்…’
சவூதி அரசு நிதாகத் சட்டத்தை இயற்றி அங்கு பணிபுரியும் வெளிநாட்டினருக்கு நெருக்கடி கொடுப்பதுபோல், அறிவிக்கப்படாத ஓர் அவசர நிலையை உருவாக்கியுள்ளது குவைத் அரசு. சவூதியில் சட்டத்திற்குப் புறம்பாகத் தங்கி பணியாற்றுபவர்களுக்குத்தான் நெருக்கடியென்றால், குவைத்தில் சட்டப்படி தங்கியிருக்கும் வெளிநாட்டினரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.
குவைத் மத்திய கிழக்கு நாடுகளுள் மிகச் சிறியது. எண்ணெய் வளத்தையே ஆதாரமாகக் கொண்ட செல்வச் செழிப்பான நாடு. குவைத் நாட்டின் மக்கள் தொகை மொத்தம் 38 லட்சம் மட்டுமே. இதில், 68 சதவிகிதமான 26 லட்சம் பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் சுமார் 6 லட்சத்து 70 ஆயிரம் பேர் இந்தியர்கள். இவர்களில் சுமார் 1.2 லட்சம் பேர் தமிழர்கள்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 57 ரூபாய் என்றால், குவைத் தினாருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 203 ரூபாய். தினார் சம்பாதிக்க, இந்தியர்களுக்கு ஆசை வராதா பின்னே? ஆலாய் பறந்து நிலம், நகைகளை அடகு வைத்து குவைத் பறந்தவர்கள், இன்று அந்நாட்டு அரசின் அதிரடிகளால் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். அங்கு பணி புரிந்துவரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றப்படும் அபாயம் நிலவுகிறது.
இங்கு சட்டப்பூர்வமான விசா பெற்றுத் தங்கிப் பணியாற்றும் இந்தியர்களையும் விசாவைத் தவறாகப் பயன்படுத்தி வேலையிலிருப்பதாக அதிரடியாக வெளியேற்றி வருகிறது குவைத் காவல் துறை. இது குறித்து சமீபத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுதிய கடிதத்தில், ‘தகுந்த விசா இன்றி, சட்ட அனுமதி தரும் ஆவணங்கள் இன்றி அங்கே இருக்கின்ற வெளிநாட்டினரை, இந்தியர்களை, தங்கள் நாட்டைவிட்டு அனுப்ப குவைத் அரசுக்கு உரிமை உண்டு என்றபோதிலும், முறையான விசா பெற்று, தகுந்த சட்ட ஆவணங்களோடு இருக்கின்ற இந்தியர்களையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து, அவர்கள் விளக்கம் அளிப்பதற்குக் கூட வாய்ப்புத் தராமல், கொட்டடிகளில் அடைத்து வைத்து இந்தியாவுக்குத் திருப்பி வைப்பது மிகவும் அநீதியானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
குவைத்தில் இரண்டு வகை விசாக்கள் உண்டு. 1. காதிம் விசா 2. சூன் விசா. காதிம் விசா என்பது வீட்டு வேலை, ஓட்டுநர் பணி போன்ற வேலைகளுக்கானது. சூன் விசா என்பது நிறுவனப் பணிகளுக்கானது.
இதில் காதிம் விசா பெற்றுச் சென்றவர்களே பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். காதிம் விசாவில் ஓர் அரபி வீட்டில் வேலைக்குச் செல்பவர்கள், பிறகு அந்த அரபியிடம் தனாசில் (வேறிடத்தில் பணிபுரிய அனுமதி) பெற்று, இன்னொரு அரபியிடம் வேலைக்குச் செல்கிறார்கள். இப்படிப் பணியாற்றும் அனைவருக்கும் இப்போது குவைத் அரசால் ஆபத்து உருவாகியுள்ளது. பலரையும் அந்த அரசு, தன் நாட்டிலிருந்து வெளியேற்றி வருகிறது. விசாரணை ஏதுமில்லை.
காதிம் விசா தவிர, சூன் விசாவில் வந்தவர்களையும் குவைத் அரசு விட்டு வைக்கவில்லை. இந்த விசா பெற்று ஒரு நிறுவனத்தில் பணி புரிபவர்கள், அந்த நிறுவனத்தின் அனுமதியுடன் வேறு நிறுவனத்தில் பணி புரியலாம். இவர்களையும் தேடிப் பிடித்து, விசாரணையின்றி திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கிறது குவைத் அரசு.
குவைத்தில் பணியாற்றும் சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற நண்பர் கூறும்போது, குவைத் அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் சட்ட விரோதமானவை. இப்போதிருக்கும் நடைமுறைகள் அரபிகளாலும், நிறுவனங்களாலும் நீண்ட காலமாகப் பின்பற்றப் படுபவையே. இது அந்நாட்டு அரசுக்கும் தெரியும். தற்போது, சோதனைகளில் பிடிபடுவோரை குவைத்தில் அவர்கள் தொடர்புடைய யாருக்கும் தகவல் அளிக்காமல், அதிரடியாக திருப்பி அனுப்பி விடுகிறார்கள். இதனால், வெளியில் சென்ற நண்பர்கள் யாராவது தாமதமாகத் திரும்பும் நிலை வந்தால் பதட்டமாகிவிடுகிறது. அதனால், தாமதம் ஆகும் என்கிற சூழல் வரும்போது, தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நாங்கள் தகவல் பரிமாறிக் கொள்கிறோம். ஓரிடத்தில் விசா பெற்று இன்னொரு இடத்தில் பணிபுரிவோரைத் தண்டிக்கும் குவைத் அரசு, அத்தகைய அனுமதி வழங்கும் அரபியையோ, நிறுவனத்தையோ ஏன் தண்டிப்பதில்லை என்பதுதான் புரியவில்லை.
நாங்கள் இந்திய மற்றும் தமிழக அரசுகளிடம் எதிர்பார்ப்பதெல்லாம், சவூதியைப் போலவே இங்குள்ளவர்களும் தங்கள் நிலைமையைச் சரிசெய்துகொள்ள கால அவகாசம் கேட்டும் வலியுறுத்த வேண்டும். இங்கு தமிழர்கள் அதிகம் இருப்பதால், தமிழக அரசும் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தரவேண்டும்…” என்கிறார் அந்த நண்பர்.
இதுகுறித்து குவைத் உள்துறை அமைச்சக கர்னல் ஆதில் அல் ஹஷாஷ் கடந்த வாரம் அங்குள்ள தொண்டு நிறுவனங்களிடம் பேசியபோது, கடுமையான போக்குவரத்து மீறல்களுக்கு இதுவரை 2,000 வெளி நாட்டினர் வெளியேற்றப்பட்டு விட்டனர்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் அவர்,
சோதனையின்போது கைது செய்யப்படுபவர்கள், அன்றைய தினமே அவரவர் சோந்த நாட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள் என்பதையும் வீடு வீடாக சோதனை நடக்கிறது என்பதையும் மறுத்தார்.
ஆனால், ஜ்லீப் அல் ஷ்யூக், சால்மியா மற்றும் சில பகுதிகளில் தனியார் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நடத்தப்பட்ட கடுமையான காவல்துறை சோதனைகள் பற்றிய புகார்கள், ‘அரபு டைம்ஸ்’ நாளிதழுக்கு வந்துள்ளன. இது குறித்து யாரும் வெளிப்படையாகப் புகார் தர அஞ்சுவதே குவைத் அரசின் இன்றைய சாதகமாக உள்ளது.
குவைத்: பாதுகாப்பு டிப்ஸ்
குவைத்தைச் சேர்ந்த நமது வாசகர் ஒருவர், அனுப்பியிருக்கும் சில பாதுகாப்பு டிப்ஸ். மற்ற தேசத்திலிருக்கும் தமிழர்களும் இதனைப் பின்பற்றலாம். தவறில்லை.
உங்களின் குடியுரிமை அடையாள அட்டையை (CIVIL id CARD) எப்போதும் கையில் வைத்திருங்கள். பக்கத்து வீட்டிற்குப் போனாலும் சொந்த காரில் இருந்தாலும் நீங்கள் தங்கியிருக்கும் அபார்ட்மெண்ட்டின் கீழேயே உள்ள ஷாப்பிங் மாலுக்குப் போனாலும் சரி, ‘பக்கத்தில்தானே’ என்கிற எண்ணம் வேண்டாம். அடையாள அட்டை கையில் இருக்கட்டும்.
குடியுரிமை அட்டையில் உள்ள உங்கள் முகவரியில் மட்டுமே தங்குங்கள்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு டிரைவிங் லைசென்ஸ் போதுமானது.
வெளியில் எங்கு சென்றாலும் தேவையான, முறையான ஆவணங்களை (சொந்த வாகனமாக இருந்தால் வாகனப் பதிவு பற்றிய விவரங்கள், லைசென்ஸ், திருமணமானவர் என்றால், அதற்கான அத்தாட்சி), உடன் எடுத்துச் செல்ல வேண்டும். உடன் கைக்குழந்தையை எடுத்துச் சென்றாலும் அதனுடைய ஆவணங்களையும் எடுத்துச் செல்லுங்கள்.
உங்கள் வீட்டு விலாசத்திற்குத் தொடர்பே இல்லாத இடத்தில் வசிக்கும் உறவினரையோ, நண்பரையோ உங்கள் காரில் ‘டிராப்’ செய்வதை தவிர்ப்பது நல்லது. அதேபோல விமான நிலையத்திற்கு, தெரிந்தவர்களை டிராப் செய்வது போன்ற செயல்கள், சமயங்களில் சொந்தக் கார் என்றாலும் டாக்ஸியாக அதைப் பயன்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம் செய்து கொள்வார்கள்.
வீட்டிற்குத் தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கும்போதும் சில்லறை வியாபாரத்திற்காக வாங்குகிறீர்கள் என்ற சந்தேகம் வர வாய்ப்பு உண்டு. இதையும் தவிர்ப்பது நல்லது.
சிக்னல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை ஒழுங்காக, கவனமாக கடைப்பிடியுங்கள்.
கணவன், மனைவி இருவரும் வேறுவேறு இடங்களில் வேலை செய்தால், தங்கள் திருமணச் சான்றிதழ்களை இருவரும் தனித்தனியாக வைத்திருக்கவும்.
அங்கு காவல் துறையினரின் சோதனைகளின்போது கடுமையாக நடத்தப்படும் நிலை நேரிட்டால், தமிழகத்திலுள்ள குவைத் உள்துறை அதிகாரிகளிடம் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
Inspection Department Ministry of Interior, Kuwait
Fax: 044-22435580, Tel: 044-24768146/25200334
மேலும் இங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க கீழ்க்கண்ட எண்ணையோ, மின்னஞ்சலையோ தொடர்புகொள்ளலாம்.
Phone No: 044-67623639
E-Mail ID: consularhelp@indembkwt.org
மலேசியா :
‘தமிழனை தமிழன் சாப்பிடறான்டா தம்பிப் பயலே…’
மீட்பு அறக்கட்டளையின் தலைவரான சேரன் ஒருபுறம் வெளிநாட்டு மோகத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்க… மதுரையைச் சேர்ந்த சிவ சோம சுந்தரம், வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அங்குள்ள தமிழ் அமைப்புகள் மூலம் தூதரகங்களைத் தொடர்புகொண்டு மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். சேரன் குறித்து அறிந்த சிவ சோமசுந்தரம், ‘நம் இருவரின் நோக்கமும் ஒரு வகையில் ஒன்றுதான். தனியாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாம் ஏன் ஓர் அமைப்பாக இயங்கக் கூடாது?’ என்று சேரனிடம் கேட்டார்.
அப்போது தொடங்கப்பட்டதுதான் மீட்பு அறக்கட்டளை. கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இதுவரை வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 700 பேரை அங்குள்ள தன்னார்வ அமைப்புகள் மற்றும் தூதரகங்களைத் தொடர்புகொண்டு மீட்டுள்ளது. மீட்பு அறக்கட்டளையின் செயலாளர் சிவ சோமசுந்தரம், மலேசியா செல்லும் தமிழர்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்று விவரித்தார்.
மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தினமும் குறைந்தபட்சம் 25 தமிழர்களாவது அநாதைகளாக நிற்பதைப் பார்க்க முடியும். அவர்களை ரிசீவ் செய்ய யாரும் இருக்க மாட்டார்கள். இவர்களிடம் பெரிய தொகையை வசூல் செய்துகொள்ளும் ஏஜெண்ட்கள், டூரிஸ்ட் விசாவில் இவர்களை இங்கு கொண்டு வந்து, ஏர்போட்டில் அநாதையாக விட்டு விடுகிறார்கள். இவர்கள் ஏர்போர்ட்டில் பயந்துகொண்டே அலைந்து கொண்டிருப்பார்கள். அப்போது, இன்னொரு ஏஜண்ட் யாராவது வருவார். அவர், இவர்கள் மீது இரக்கப்படுவது போல் பேசி, கூட்டிப்போய் சாப்பாடு கொடுத்து ஒருவாரம் தங்க வைப்பார்.
அதற்குள் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்ய அதன் முதலாளியிடம் பேசி, ஒரு பெரிய தொகை வாங்கிக் கொள்வார். பிறகு இவரிடம் வந்து, ‘ஒரு நல்ல வேலை… நல்ல சம்பளம்…போறீங்களா?’ என்று அக்கறையாகக் கேட்பார். இவர் அதற்குச் சம்மதம் கொடுத்தவுடன், பிறகு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குவார். அந்த ஒப்பந்தம் மலாய் மொழியில் இருக்கும். இவர் அந்த ஏஜெண்ட்டின் மீது நம்பிக்கை வைத்து, அவர் கூறும் இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து, அவர் காட்டும் முதலாளியுடன் காரில் போய்விடுவார்.
வேலை செய்யும் நிறுவனத்தைச் சென்றடைந்த பின்னர்தான், அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்மைகள் விளங்கும். இவரைப் போலவே அங்கு பலர் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அவர்கள்தான் இவரிடம் உண்மை நிலவரத்தைச் சொல்வார்கள். அந்த உண்மைகள், இவர் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறார்; மூன்று ஆண்டுகள் இங்கிருந்து வெளியேற முடியாது ; சம்பளம் கூட சரியாகக் கிடைப்பதில்லை; உணவு, தங்குமிடம் ஆகியவை மிக மோசம்; 15 மணிநேர வேலை போன்றவை ஆகும்.
நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்து அங்கிருந்து தப்பிக்க நினைத்தால், இதற்கு முன் தப்ப முயன்றவர்கள் அனுபவித்த அவஸ்தைகள் அவருக்கு விளக்கப்படும். அது என்ன அவஸ்தைகள்?
சம்பளம் ஒழுங்காகத் தரவில்லை என்பதைத் தட்டிக்கேட்டு, ஊருக்குச் செல்வதாய் சொல்பவர்களை அடியாட்களை வைத்து அடித்து, உடைகளைக் களைந்து, முழு நிர்வாணமாக்கி கை,கால்களைக் கட்டி, ஓர் அறைக்குள் அடைத்து விடுவார்கள் (இதுபோல் தண்டனை அனுபவித்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்களை நான் சந்தித்திருக்கிறேன்).
மலேசிய நாட்டில் பெரிய அதிர்வை உருவாக்கியது, மாயவரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் கொலைச் சம்பவம். கணேஷ்குமாருக்குச் சம்பளம் தரப்படவில்லை. சம்பளம் மற்றும் உரிமைகளுக்காக முதலாளியுடன் வாக்குவாதம் செய்ததில், முதலாளியும், முதலாளி மனைவியும் கணேஷ்குமாரை அடித்து, கை, கால்களைக் கட்டி, காரில் கொண்டு சென்று காட்டில் போட்டுவிட்டனர். ஏழு நாட்கள் கழித்து குற்றுயிராகக் கிடந்த அவரைச் சிலர் பார்த்துவிட்டு, மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு வந்துசேர்த்த பிறகு, சில மணிநேரங்களில் அவர் உயிர் பிரிந்து விட்டது.
அதேபோல் காரைக்குடியைச் சேர்ந்த சிவக்குமாரும் முதலாளியால் கடுமையாகத் தாக்கிக் கொல்லப்பட்டார்.
தாக்கிய முதலாளிகளுக்குத் தண்டனை இல்லை. இது போன்ற சம்பவங்களைச் சொல்லிச் சொல்லி அங்கு ஏமாற்றப்பட்டு, குறைந்த சம்பளத்தில் அதிக வேலை பார்க்கும் தமிழர்களை அச்சுறுத்தி வைத்திருக்கிறார்கள்.
இதில் கொடுமை என்னவென்றால், இங்கு தமிழர்களை அடிப்பதும் தமிழ் முதலாளிகள்தான். கடந்த 6 மாதங்களில் பெரம்பலூர் சுதா, அருப்புக்கோட்டை முத்துராஜ், திருப்பூண்டி விஜயராகவன், ராமநாதபுரம் அமீன் ஆகியோர் மலேசியாவில் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார்கள். அதற்கு வழக்குப் பதிவு செய்யவோ, தட்டிக் கேட்கவோ அங்கு யாருமில்லை. இதுபோல் காணாமல் போனவர்கள், தாக்கப்பட்டவர்கள், கொலை செய்யப்பட்டவர்கள் என்று கடந்த காலப் பட்டியல் நீளமானது. சோகமானது” என்று வேதனையுடன் முடித்தார் சிவ சோமசுந்தரம்.
சிவ சோமசுந்தரம் மொபைல் எண்: 80569 17878
தேவை நல வாரியம்!
2011-இல் தமிழக அரசு, தமிழ்நாடு அயல்நாடுவாழ் தமிழர்கள் நல்வாழ்வுச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை இயற்றியது. தமிழ்நாட்டிற்கு வெளியே பிற மாநிலங்களிலே வாழக்கூடிய, பிற மாநிலங்களிலே பணியாற்றக்கூடிய தொழிலாளர்களுக்கும் அதேபோல, இந்தியக் கடல் எல்லைக்கும் அப்பால் வெளிநாடுகளில் வாழக் கூடிய தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்குரிய எல்லா நலன்களையும் பாதுகாக்கக் கூடிய வகையிலே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தினுடைய பிரிவு 10-இல் தமிழ்நாடு அயல்நாடுவாழ் தமிழர்களுக்கான நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்த நல வாரியத்தை விரைவிலே இந்த அரசு, அமைப்பதற்கான சட்டங்களை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
-09.05.2013 அன்று, தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கையில் பேரா. எம். எச். ஜவாஹிருல்லா பேசியது
நன்றி புதிய தலைமுறை
|