அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.
அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.
சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’ என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.
உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.
நீதி : முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.
பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால் பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்டாடின.
இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது. அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.
அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது: “போதும்! நான் பால் குடிக்க வேண்டும்…”
கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது.
இதைக் கண்ட கீழே இருந்த எலி, “நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும்” என்று நினைத்தது. பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது.
நீதி : துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை.
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.
ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.
யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!” என்று சொல்லிச் சிரித்தது.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா, நீ பயந்து விட்டாயா?” என்று கேட்டது.
அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:
“நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்.”
நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். கழுதைப் புலியோ, “நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?” என்று கேட்டது.
குட்டி கழுதைப்புலி சொல்லியது: “நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்”.
அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. “ஏன் இங்கே வந்தாய்?” – கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.
பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: “ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்”.
குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: “பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?”
“மகனே! சிங்கம் மிகக் கொடுரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக” என்றது தாய் கழுதைப்புலி.
நீதி : நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.